இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
நடந்துமுடிந்த டெஸ்ட் போட்டியில் 2-0 என வென்ற ஆஸ்திரேலியா அணி, சொந்த மண்ணில் இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று நடைபெற்றது.
பரபரப்பாக தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
என்ன தான் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தாலும் மறுமுனையில் தனியாளாக நின்று போராடிய கேப்டன் அசலங்கா, 14 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என விளாசி 127 ரன்கள் குவித்து அசத்தினார்.
அசலங்காவின் சதத்தின் உதவியால் 214 ரன்கள் என்ற டீசண்ட்டான டோட்டலை எட்டியது இலங்கை அணி.
இந்தியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச்சை தயார்செய்திருந்த இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அதையே செய்திருந்தது.
இந்த சூழலில் 215 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள், இலங்கையின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 0, 2, 3 என வந்த வீரர்கள் எல்லாம் வெளியேறிகொண்டிருக்க, 4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்மித் மற்றும் லபுசனே ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி எப்படியும் போட்டியை மீட்டு எடுத்துவந்துவிடும் என நினைத்த நிலையில், இந்திய தொடரில் கோலி, ரோகித்தின் விக்கெட்டை வீழ்த்திய இளம்வீரர் துனித் வெல்லலகே முதல் பந்திலேயே ஸ்மித்தை 12 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினர். லபுசனேவை தீக்ஷனா வெளியேற்ற, அதற்பிறகு ஆஸ்திரேலியா அணி 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.