wi vs sl web
கிரிக்கெட்

T20| தசுன் சனகாவின் அதிரடி அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த இலங்கை!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Rishan Vengai

ஜமைக்காவில் நடந்த 2வது டி20யில் இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் தடுமாறிய நிலையில், தசுன் சனகா 24 பந்தில் 58 ரன்கள் அடித்து அணியை உயர்ந்த ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். பதிலுக்கு 195 ரன்கள் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, தொடர் 1-1 என சமநிலைக்கு வந்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இலங்கை

ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் இலங்கை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதற்கடுத்த 2 போட்டிகளும் மழையால் ரத்துச்செய்யப்பட்ட நிலையில் 1-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது இலங்கை அணி.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், 2வது டி20 போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி கடைசிநேரத்தில் 24 பந்தில் 58 ரன்கள் விளாசிய தசுன் சனகாவால் நல்ல டோட்டலை எட்டியது. 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களை அடித்து அசத்தினார்.

195 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 157 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதன்மூலம் 2 போட்டிகளின் முடிவில் 1-1 என தொடர் சமன்செய்யப்பட்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறவிருக்கிறது.