ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, சமோவா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், நைஜீரியா முதலிய அணிகள் பங்கேற்றுள்ளன.
41 போட்டிகள் நடைபெறவிருக்கும் இந்த தொடரில், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இலங்கை, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையேயான போட்டியில், 23 ரன்னில் மலேசியாவை சுருட்டிய இலங்கை அணி பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை வீராங்கனை தஹாமியின் அரைசதத்தின் உதவியால் 20 ஓவரில் 162 ரன்களை சேர்த்தது இலங்கை.
அதனைத்தொடர்ந்து விளையாடிய மலேசியா அணி இலங்கையின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 23 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதில் 6 வீரர்கள் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
மலேசியாவை 139 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
இந்திய அணியை பொறுத்தவரையில் தங்களுடைய முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்திருக்கும் இந்தியா, நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் தொடரை நடத்தும் நாடான மலேசியாவை எதிர்கொள்கிறது.