srh vs pbks cricinfo
கிரிக்கெட்

’என்னயா பண்ணி வச்சிருக்கீங்க..’ பஞ்சாபை பந்தாடி முதலிடத்திற்கு சென்றது SRH.!

தமிழக அரசியல் பரபரப்புக்கு இடையில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5 வெற்றிகள் உதவியால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்க்கு முன்னேறியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடரில் பலவீன அணியாக கருதப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இளம் பந்துவீச்சாளர்களின் எழுச்சியாலும், இஷான் கிஷன் தலைமையாலும், பாட் கம்மின்ஸ் சேர்க்கையாலும் அசுர பலம் பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்ட போட்டியில் SRH 235 ரன்கள் குவித்து, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது.

2026 ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் இல்லாமல், வலுவான பந்துவீச்சு யூனிட் இல்லாமல் சுமாரான அணியாக தெரிந்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி. ஆனால் எப்போது இளம் பந்துவீச்சாளர்களான பிரபுல் ஹிங்கே, சஹிப் ஹுசைன், ஷிவாங் குமார் உள்ளிட்டோர் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட ஆரம்பித்தார்களோ அப்போதிலிருந்து அவ்வணி வேறொரு அணியாக மிரளவைத்து வருகிறது.

ஒருநல்ல பிளேயிங் 11-ஐ கண்டுபிடித்து அணியை இஷான் கிஷன் சிறப்பாக வழிநடத்த, தற்போது பாட் கம்மின்ஸ் வருகையால் அசுர பலத்தை பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. போறபோக்க பார்த்தா கோப்பை வென்றுவிடுவார்களோ எனுமளவு சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவுசெய்து மிரட்டியுள்ளது SRH.

pat cummins

இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரின் பலம்வாய்ந்த அணியான பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டு விளையாடியது ஹைதராபாத்.

முதலிடத்திற்கு முன்னேறியது SRH..

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பங்களிப்பை கொடுத்து 20 ஓவரில் 235 ரன்களை சேர்த்தனர். அதிகபட்சமாக கிளாசன் 69 ரன்களும், இஷான் கிஷன் 55 ரன்களும் சேர்த்தனர்.

pat cummins

236 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே பிரியான்ஸ் ஆர்யாவை 1 ரன், பிரப்சிம்ரன் 3 ரன், ஸ்ரேயாஸ் ஐயரை 5 ரன்களில் வெளியேற்றிய SRH அணி அதிர்ச்சி கொடுத்தது. என்ன தான் ஒருபக்கம் விக்கெட்டாக சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்சிய கூப்பர் கானலி சதமடித்து அசத்தினார். கானலி 59 பந்துகளில் 8 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 107 ரன்கள் அடித்தபோதும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 202 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

கூப்பர் கானலி

33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ் அணி 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2வது மற்றும் 3வது இடங்களில் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் நீடிக்கின்றன. இன்றைய போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணி வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.