”ஆறு பேரில் நானும் ஒருத்தி..” பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டு வைத்த வினேஷ் போகத்!
தேசிய ஓபன் ரேங்கிங் தொடரில் தன்னை விளையாட விடாமல் சம்மேளனம் தடுப்பதாக வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், முன்னாள் சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
பாரிஸில் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவர், ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டியை எட்டிய போதிலும் அவருக்கு பதக்கம் மறுக்கப்பட்டது. அன்றைய தினத்தின் காலையில் நிர்ணயிக்கப்பட்ட எடை வரம்பைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததற்காக வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, உடனடியாக மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர், தாயகம் திரும்பிய அவர், தான் வகித்துவந்த ரயில்வே வேலையையும் ராஜினாமா செய்தார். அதன்பிறகு, காங்கிரஸில் இணைந்த அவர், அக்கட்சி சார்பில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார். எனினும், தனது ஒலிம்பிக் கனவைத் துரத்துவதற்காக மீண்டும் மல்யுத்தத்திற்கு தயாராகி வருவதாக வினேஷ் போகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேசிய ஓபன் ரேங்கிங் தொடரில் தன்னை விளையாட விடாமல் சம்மேளனம் தடுப்பதாக வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுக்குச் செல்ல இந்த தொடரில் பங்கேற்பது அவசியமாகும்.
இந்த நிலையில் வினேஷ் போகத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பேசிய அவர், ’இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்த ஆறு வீராங்கனைகளில் தானும் ஒருவர். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்றாலும், தற்போதையச் சூழ்நிலை காரணமாகத் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 தனது மறுபிரவேசத்தைத் தடுக்க மல்யுத்த சம்மேளனம் முயல்கிறது. பிரிஜ் பூஷன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், தற்போதைய தலைவர் சஞ்சய் சிங் மூலமாக அவரே சம்மேளனத்தைக் கட்டுப்படுத்துகிறார். பிரிஜ் பூஷனின் சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில், அவருக்குச் சொந்தமான கல்லூரியிலேயே ஓபன் ரேங்கிங் மல்யுத்தத் தகுதிப் போட்டிகளை நடத்தச் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இது நேர்மையான போட்டிக்கு வழிவகுக்காது. நடுவர்கள் முதல் புள்ளிகள் வரை அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்’ என அதில் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் சிங் இருந்தபோது, அவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். இது, உலகளவில் அதிரவலைகள் ஏற்படுத்தியிருந்தது.

