csk vs srh cricinfo
கிரிக்கெட்

’இதான் சார் பிரச்னையே..’ மீண்டும் தோற்ற CSK.. கேப்டன் மற்றும் நிர்வாகத்தை விளாசும் ரசிகர்கள்!

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்றபோதும் சென்னை அணியால் வெற்றிபெற முடியவில்லை.

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு சரியான பிளேயிங் 11-ஐ கண்டுபிடித்து இரண்டு வெற்றிகள் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், SRH-க்கு எதிரான போட்டியில் மீண்டும் அணியில் பல மாற்றங்கள் செய்து தோல்வியை சந்தித்தது. அபிஷேக் சர்மா, கிளாஸன் ஆட்டத்தால் 195 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ருதுராஜ், மேத்யூ ஷார்ட் உள்ளிட்டோரின் குழப்பமான பேட்டிங் காரணமாக சிஎஸ்கே 184 ரன்களில் மட்டுமே நின்றது. இதனால் கேப்டன் மற்றும் நிர்வாகத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

2026 ஐபிஎல் தொடரில் வரிசையாக 3 போட்டிகளில் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சரியான பிளேயிங் 11-ஐ கண்டுபிடித்த பிறகு தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்று அசத்தியது. ஆனால் நேற்று நடைபெற்ற SRH-க்கு எதிரான போட்டியில் மீண்டும் அணியில் பல மாற்றங்களை செய்த சிஎஸ்கே அணி, மீண்டும் ஒரு தோல்வியை தழுவி மோசமாக செயல்பட்டுள்ளது.

சிஎஸ்கே, 2026

நல்லா இருந்த பிளேயிங் 11 எதுக்கு மாற்றணும், காயத்தோட எதுக்கு ஆயுஷ் மாத்ரேவ விளையாடணும், அகீல் ஹொசைன் ஏன் விளையாடல, மேத்யூ ஷார்ட் விளையாடினாலும் ஏன் டாப் ஆர்டரில் பேட்டிங் தரல, எதுக்கு ருதுராஜ ஓப்பனிங் இறக்கி பவர்பிளேவ வீணடிக்கிறங்க என்ற பல அதிருப்திகளை ரசிகர்கள் வைத்துவருகின்றனர்.

அபிஷேக் சர்மா அதிரடியில் 195 ரன்கள் சேர்த்த SRH..

ஹைத்ராபாத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆனால் ஏன் பவுலிங்கை தேர்வுசெய்தோம் என வருத்தப்படும் அளவு பவர்பிளேவில் ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக் சர்மா 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து 15 பந்தில் அரைசதமடித்து மிரட்டினார். மறுபக்கம் டிராவிஸ் ஹெட்டும் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்ட வலுவான தொடக்கத்தை பெற்றது சன்ரைசர்ஸ் அணி.

அபிஷேக் சர்மா

ஆனால் அடுத்தடுத்த 2 பந்துகளில் டிராவிஸ் ஹெட் 23 ரன்னிலும், இஷான் கிஷன் 0 ரன்னிலும் அவுட்டாக, அபிஷேக் சர்மாவும் 59 ரன்களில் வெளியேறினார். 3 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி கம்பேக் கொடுத்த சென்னை பவுலர்கள் இழுத்துப்பிடித்தனர்.

ஒருகட்டத்தில் 230 ரன்கள் வரை போகும் என்றிருந்த ஹைத்ராபாத் ஆட்டம் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகளால் மந்தமானது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய, மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய கிளாஸன் 59 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 194 ரன்களை மட்டுமே அடித்தது ஹைத்ராபாத்.

10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற சிஎஸ்கே..

195 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய சென்னை அணியில் வழக்கம்போல 1 சிக்சர் அடித்தபிறகு வெளியேறினார் சஞ்சு சாம்சன். மறுபக்கம் பவர்பிளேவை வீணடித்த கேப்டன் ருதுராஜ் 13 பந்தில் 19 அடித்து அவுட்டாக, 3வது வீரராக களமிறங்கி 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு 13 பந்தில் 30 ரன்கள் அடித்து துவம்சம் செய்தார். ஆனால் காயத்துடன் விளையாடிய மாத்ரே விரைவாகவே வெளியேறினார்.

மாத்ரே

அடுத்துவந்த மேத்யூ ஷார்ட் 30 பந்தில் 33 ரன்கள் அடிக்க ரன்ரேட் வேகமாக அதிகரித்தது. சர்பராஸ் கான் 25 ரன்னில் அவுட்டாக அடுத்துவந்த பிரேவிஸ் 0 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த ஷிவம் துபே 1 சிக்சர் 1 பவுண்டரி என அடிக்க, சிறப்பாக பந்துவீசிய ஈஷன் மலிங்கா அவரை போல்டாக்கி அனுப்பினார்.

கடைசிவரை எந்த நம்பிக்கையில்லாமல் விளையாடிய சிஎஸ்கே அணி 184 ரன்கள் மட்டுமே அடித்து 10 ஓவரில் தோல்வியை தழுவியது. 190 ரன்களுக்கு மேலான சேசிங்கை கடந்த 6 ஆண்டுகளில் சிஎஸ்கே அடித்ததே இல்லை என்ற மோசமான சாதனை மீண்டும் தொடர்கிறது.