The 100 | Southern Brave
The 100 | Southern Brave ECB
கிரிக்கெட்

The 100 | மூன்றாவது வாய்ப்பில் கோப்பையை வென்ற சதர்ன் பிரேவ்... பயிற்சியாளர் முக்கியம் பிகிலே..!

Viyan

"ஒண்ணு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே, உன் லவ்வு தான் மூன்றாம் சுற்றில் முழுமை காணுமடா" என்று வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஒரு பாடல் வரி வரும். அது சதர்ன் பிரேவ் பெண்கள் அணியின் விஷயத்தில் உண்மையாகியிருக்கிறது. முதல் இரண்டு 'தி 100' சீசன்களின் இறுதிப் போட்டிகளிலும் தோற்றிருந்த அந்த அணி, இம்முறை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

Southern Brave

தி 100 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. பெண்கள் பிரிவில் குரூப் சுற்றின் முடிவில் சதர்ன் பிரேவ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ், வெல்ஷ் ஃபயர் அணிகள் அடித்த இரு இடங்கள் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

(பி.கு: தி 100 தொடரில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்)

சூப்பர்சார்ஜர்ஸ், ஃபயர் அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. அதனால் புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருந்ததன் அடிப்படையில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார் சூப்பர்சார்ஜர்ஸ் கேப்டன் ஹோலி ஆர்மிடாஜ்.

சதர்ன் பிரேவ் அணிக்காக பிரேவான தொடக்கம் கொடுத்தார் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா. கிரேஸ் பலிஞ்சர் வீசிய முதல் பந்தையே பௌண்டரிக்கு வீசினார் அவர். ஆனால், அதற்கடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து அதிச்சியளித்தார் ஸ்மிரிதி. இந்த சீசனில் அந்த அணியின் டாப் ஸ்கோரராக விளங்கிய மாயா பூச்சியேரும் வெகுநேரம் நிற்கவில்லை. 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், கேட் கிராஸ் பந்துவீச்சில் வெளியேறினார். முதல் 9 பந்துகளில் ஓப்பனர் டேனி வயாட் ஒரு பந்து கூட சந்தித்திடாமல் இருந்த நிலையில், இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது சதர்ன் பிரேவ்.

Maia Bouchier

அடுத்து களமிறங்கிய ஜார்ஜியா ஆடம்ஸ், வயாட்டுடன் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். அதிரடியாக விளையாடிய டேனி வயார் 38 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் ஆடம்ஸும் (28 பந்துகளில் 27 ரன்கள்) வெளியேறினார். இருந்தாலும் கடைசி கட்டத்தில் ஃப்ரேயா கெம்ப் அதிரடியாக 17 பந்துகளில் 31 ரன்கள் விளாச, 100 பந்துகளில் 139 ரன்கள் எடுத்தது சதர்ன் பிரேவ்.

140 என்ற இலக்கை சேஸ் செய்த சூப்பர்சார்ஜர்ஸும் தங்கள் இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை இழந்தது. லாரன் பெல் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார் மேரி கெல்லி. தன் முதல் ஸ்பெல்லில் அற்புதமாக செயல்பட்ட பெல், 13 ரன்கள் எடுத்திருந்த ஃபீபி லிட்ச்ஃபீல்டையும் வெளியேற்றினார். இந்திய வீராங்கனை ஜெமீமா ராட்ரிக்ஸ் சற்று போராடினாலும் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது சூப்பர்சார்ஜர்ஸ். அதிகபட்சமாக ஜெமீமா மட்டுமே 24 ரன்கள் எடுத்தார். வேறு எந்த வீராங்கனைகளும் 20 ரன்களைக் கடக்காததால் சூப்பர்சார்ஜர்ஸால் 105 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக 100 தொடரின் சாம்பியன் ஆனது சதர்ன் பிரேவ் அணி. தொடர்ந்து 2 ஃபைனல்களில் தோற்றிருந்த அந்த அணி, மூன்றாவது வாய்ப்பில் கோப்பை வென்று அசத்தியிருக்கிறது.

தி 100 தொடர் தொடங்கியதிலிருந்தே சதர்ன் பிரேவ் அணிக்கு இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் சர்லோட் எட்வார்ட்ஸ் தான் பயிற்சியாளராக இருக்கிறார். தனக்கான ஒரு நல்ல அணியை அவர் உருவாக்கியிருந்தாலும், அசத்தலாக செயல்பட்ட ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியிடம் தொடர்ந்து இரு ஃபைனல்களிலும் தோற்றது சதர்ன் பிரேவ். இருந்தாலும் இந்த முறை மூன்றாவது வாய்ப்பில் அந்த அணி தங்கள் லட்சியத்தை அடைந்துவிட்டது. இந்தியாவில் நடந்த வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்தது இதே சர்லோட் எட்வர்ட்ஸ் தான்!