Cricket World Cup | யுவராஜின் அந்தக் கொண்டாட்டத்தை மறக்க முடியுமா?
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம்.
2011 உலகக் கோப்பை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் நடைபெற்றது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு பட்டையைக் கிளப்பிய இந்தியா, பி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றது. ஏ பிரிவில் மூன்றாவது இடம் பிடிக்கும் அணியோடு இந்தியா காலிறுதியில் மோதவேண்டும். அப்போதுதான் இந்திய ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்தது பாகிஸ்தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியை வென்று ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி. ஆஸ்திரேலியாவோ நெட் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடமே பிடித்தது. அதனால், காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா. கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவை உலகக் கோப்பை அரங்கில் சந்தித்தது அந்த 2003 ஃபைனலில்... யாரால் மறக்க முடியும்!
ஆஸ்திரேலியா அந்தத் தொடரை மூன்று முறை நடப்பு சாம்பியனாக அணுகியது. 1999, 2003, 2007 என அடுத்தடுத்து கோப்பை வென்றிருந்த அந்த அணி, ரிக்கி பான்டிங் தலைமையிலும் ஹாட்ரிக் கோப்பைகள் வெல்லத் தயாராக இருந்தது. இந்நிலையில் இந்தியாவுடனான காலிறுதிப் போட்டி மார்ச் 24ம் தேதி அஹமதாபாத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங் பேட்டிங் தேர்வு செய்தார்.
அந்தப் போட்டியில் ஒரு மிகமுக்கிய முடிவு எடுத்திருந்தார் தோனி. அதுவரை ஒரேயொரு லீக் போட்டியில் மட்டும் ஆடியிருந்த ரவிச்சந்திரன் அஷ்வினை இந்தப் போட்டியில் களமிறக்கினார் அவர். அதுமட்டுமல்லாமல் அவரை வைத்தே பந்துவீச்சையும் தொடங்கினார். அதன் பலனாக பத்தாவது ஓவரிலேயே வாட்சனை வெளியேறினார் அஷ்வின். மற்றொரு ஓப்பனர் பிராட் ஹாடின் கேப்டன் பான்டிங்கோடு இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்கினார். ஆனால் ஹாடின் அவுட் ஆனதும், மிடில் ஆர்டரில் சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழத் தொடங்கின. இருந்தாலும் கேப்டன் பான்டிங் விடாமுயற்சியோடு ஆடிக்கொண்டிருந்தார்.
2003 ஃபைனலைப் போலவே இந்தப் போட்டியிலும் சதமடித்த அவர், 118 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் டேவிட் ஹஸ்ஸி கொஞ்சம் அதிரடி காட்ட 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.
பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்த்து இந்தியா இந்தப் போட்டியை வெல்லுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. சேவாக் தொடக்கத்தில் வீழ்ந்திருந்தாலும், சச்சின் - கம்பீர் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இருவருமே அரைசதம் எடுத்து அவுட் ஆனார்கள். சச்சின் 53 ரன்களும், கம்பீர் 50 ரன்களும் எடுத்தனர். அப்போது இளம் நம்பிக்கையாக இருந்த விராட் கோலி 24 ரன்களுக்கு அவுட் ஆனார். நான்காவது விக்கெட்டாக கம்பீர் அவுட் ஆன போது 33.2 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. கடைசி 100 பந்துகளில் 93 ரன்கள் தேவை என்ற மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியது ஆட்டம். கம்பீர் அவுட் ஆன அடுத்த சில ஓவர்களிலேயே பிரெட் லீ பந்துவீச்சில் ஏழே ரன்களில் ஆட்டமிழந்தார் கேப்டன் தோனி.
தோனி ஆட்டமிழந்த பின் இந்திய அணியின் வெற்றிக்கு 75 பந்துகளில் 74 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்தது கடைசி இரண்டு பேட்ஸ்மேன்கள். இப்படியிருக்கையில் இந்தியாவின் வெற்றி மிகப் பெரிய கேள்வியானது. இருந்தாலும் இந்தியா மீண்டு எழுந்தது. அந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிகப் பெரிய நம்பிக்கையாக விளங்கிக்கொண்டிருந்த யுவ்ராஜ் சிங் அந்தப் போட்டியிலும் இந்திய நம்பிக்கைகளை தன் தோளில் தூக்கி சுமந்தார். அஷ்வினைப் போல் அந்த உலகக் கோப்பையில் தன் இரண்டாவது போட்டியில் ஆடிய சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆடி யுவ்ராஜுக்கு பக்க பலமாக விளங்கினார். இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நோக்கி விரைந்தனர். பிரெட் லீ, ஷான் டெய்ட், மிட்செல் ஜான்சன் அடங்கிய ஆஸ்திரேலியாவின் வேகக் கூட்டணியை சமாளித்த அவர்கள் 48வது ஓவரில் வெற்றிகரமாக இலக்கை எட்டி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றனர்.
பிரெட் லீ வீசிய 48வது ஓவரின் நான்காவது பந்தில் யுவ்ராஜ் சிங் பௌண்டரி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்தப் பந்து பௌண்டரிக்குப் போனதும் யுவ்ராஜ் சிங் களத்தில் மண்டியிட்ட கர்ஜித்த புகைப்படம், உலகக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத புகைப்படங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது என்பதையெல்லாம் தாண்டி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுதான் ரசிகர்களுக்குப் பெரும் கொண்டாட்டமாக இருந்தது. பான்டிங்கின் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது எப்போதுமே இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவு தான்.