25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடரைக் கைப்பற்றி தென்னாப்பிரிக்கா அணி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்களை அடிக்க முடியாமல் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாவது போட்டியை கவுகாத்தியில் எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு சுருண்டது. 288 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 260 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, இந்திய அணிக்கு 549 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 4வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. இன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா மட்டும் 54 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களிலேயே பெவிலியன் திரும்பினர். இதனால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் சைமன் ஹார்மர் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தவிர, 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றதன் மூலம் தொடரையும் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.
அதேநேரத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை இந்தியா இழப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக தொடரை இழந்த நிலையில், இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை இழந்துள்ளது.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு, 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருந்ததே சாதனையாக இருந்தது.
அதேபோல், 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் இந்தியா சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடர்களை கடைசியாக இழந்திருந்தது.1983ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் 1984ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகவும் தொடரை இழந்திருந்தது.
மேலும், இந்தத் தொடரில் எந்த இந்திய வீரர்களும் சதமடிக்கவில்லை. முன்னதாக 1969 மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்துக்கு எதிரான எந்த இந்திய வீரரும் சதமடிக்கவில்லை.
தென்னாப்பிரிக்காவிற்கு இது, இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாகும். முன்னதாக, 2018ஆம் ஆண்டு அவ்வணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 492 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.
அதேபோல், ஹன்சி குரோன்ஞ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, 2000ஆம் ஆண்டு 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது. தற்போது 2வது முறையாக இந்தியாவில் தொடரை வென்றுள்ளது.
கேப்டனாக பவுமா 12 டெஸ்ட் போட்டிகளில் 11 வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஒரேயொரு போட்டியால் மழையால் முழுமையாக விளையாடப்படவில்லை.
இன்னொரு புறம் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்ததன் மூலம், ஐசிசி டெஸ்ட் புள்ளிப் பட்டியலில் இருந்தும் சரிந்துள்ளது. அது, பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. அதற்கடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன.