2025 சாம்பியன்ஸ் டிரோபியானது பிப்ரவரி 19ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 9 வரை நடைபெறவிருக்கிறது. பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கின்றன.
குரூப் ஏ - பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம்
குரூப் பி - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து
இந்தியா, பாகிஸ்தான் பிரச்னையால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் ஹைப்ரிட் முறைப்படி நடத்தப்படவிருக்கிறது. மார்ச் 9-ம் தேதி நடத்தப்படும் இறுதிப்போட்டிக்கு இரண்டு மைதானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் போட்டியானது துபாயில் நடத்தப்படும், அப்படி இல்லை என்றால் பாகிஸ்தானில் லாகூர் மைதானத்தில் நடத்தப்படும்.
சாம்பியன்ஸ் டிரோபி தொடரின் முதல் ஆட்டம் பிப்ரவரி 19 அன்று பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்குகிறது. இந்த சூழலில் அனைத்து அணிகளும் அவர்களுடைய அணியையும், உத்தேச அணியையும் அறிவித்து வருகிறது.
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதிவரையிலும், 2024 டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிவரையிலும் முன்னேறி தோல்வியை தழுவியிருந்த தென்னாப்பிரிக்கா அணி, வளர்ச்சி பாதையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி உள்ளது.
இந்த நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிரோபியை வெல்லும் வகையில் வலுவான ஒரு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான இந்த அணியில் சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் இளம் வீரர்களான டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனி டி சோர்சி மற்றும் ரியான் ரிக்கல்டன் மூன்றுபேரும், ஆல்ரவுண்டரான வியான் முல்டரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்ஜே மற்றும் லுங்கி இங்கிடி இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். எய்டன் மார்க்ரம், கிளாசன் மற்றும் டேவிட் மில்லர், ககிசோ ரபாடா, மார்கோ யான்சன் மற்றும் ஷம்சி முதலிய முக்கிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சாம்பியன்ஸ் டிரோபிக்கான தென்னாப்பிரிக்கா அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஷி, மார்கோ யான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நார்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன்,டப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.