தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியை வென்று வரலாறு படைத்தது நமீபியா அணி.
சர்வதேச கிரிக்கெட்டில் டி20 விளையாட்டு அறிமுகமானதை தொடர்ந்து உலகம் முழுக்க டி20 லீக் போட்டிகள் விளையாடப்பட்டுவருகின்றன. குறுகிய வடிவ போட்டியான டி20 கிரிக்கெட் மீது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகப்படியான ஆர்வம் காட்டிவருவதால் பெரிய நாடுகள் கடந்து துணை நாடுகளும் டி20 போட்டியை சிறப்பாக விளையாடிவருகின்றன.
அந்தவகையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளது நமீபியா அணி.
நமீபியா தலைநகரத்தில் ஒரேஒரு டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. டி காக், புரொட்டோரியஸ், ஹென்ரிக்ஸ், கோட்ஸீ போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் தென்னாப்பிரிக்கா அணி 68 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் வந்த பவுலர்கள் ரன்களை அடிக்க 20 ஓவரில் 134 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.
135 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணி இறுதி ஓவரில் 11 ரன்கள் அடிக்கவேண்டிய நிலைக்கு சென்றது. இறுதிஓவரில் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சருக்கு அடித்த விக்கெட் கீப்பர் ஷான் கிரீன் நமீபியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
இதன்மூலம் ஒரு துணை நாட்டிடம் முதல்முறையாக சர்வதேச டி20 போட்டியில் தோல்வியை கண்டுள்ளது தென்னாப்பிரிக்கா அணி.