2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில், தென்னாப்பிரிக்கா 187 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவால் விட்டது. பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், டெவால்ட் பிரேவிஸ் மற்றும் டேவிட் மில்லர் பார்ட்னர்ஷிப் மூலம் தென்னாப்பிரிக்கா அணியை மீட்டனர். ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசி ஓவர்களில் அதிரடி காட்டி அணியை 187 ரன்கள் வரை கொண்டு சென்றார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பல பரபரப்பான ஆட்டங்களை பார்த்து வருகிறது. ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பியது மட்டுமில்லாமல், சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்தது. மேலும் 2026 டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று சாதனை படைத்தது.
லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ளன. நேற்று நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் சூப்பர் 8 போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று நடந்த முதல் சூப்பர் 8 போட்டியில் இலங்கையை 95 ரன்னில் சுருட்டி அபார வெற்றிபெற்றது இங்கிலாந்து. தொடர்ந்து 2வது சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிவருகின்றன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு பவர்பிளேவிலேயே ஷாக் கொடுத்தார் ஜஸ்பிரித் பும்ரா. டிகாக்கை 6 ரன்னிலும், ரிக்கல்டனை 7 ரன்னிலும் பும்ரா அவுட்டாக்க, கேப்டன் மார்க்ரமை அவுட்டாக்கி அசத்தினார் அர்ஷ்தீப் சிங்.
20 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாற, 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெவால்ட் பிரேவிஸ் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என விரட்டிய பிரேவிஸ் 45 ரன்கள் அடிக்க, 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த டேவிட் மில்லர் 63 ரன்கள் அடித்து மிரட்டினார்.
கடைசியாக வந்து 24 பந்துக்கு 44 ரன்கள் விளாசிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்த 20 ஓவரில் 187 ரன்கள் என்ற நல்ல டோட்டலை பதிவுசெய்தது தென்னாப்பிரிக்கா அணி.
இன்று நடைபெற்ற போட்டியில் 3 ஓவர்களுக்கு 39 ரன்களை விட்டுக்கொடுத்து வருண் சக்கரவர்த்தி சொதப்பினாலும், கடைசி ஓவரில் டேவிட் மில்லர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
4 ஓவரில் 1 விக்கெட் உடன் 47 ரன்களை விட்டுக்கொடுத்த வருண் சக்கரவர்த்தி தொடர்ச்சியாக 18 டி20 போட்டிகளிலும் விக்கெட்டை வீழ்த்திய இந்திய பவுலராக சாதனை படைத்தார். இதற்கு முன்பு தொடர்ச்சியாக 17 போட்டிகளில் விக்கெட்டை வீழ்த்தி அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்திருந்த நிலையில், வருண் சக்கரவர்த்தி அந்த சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.