ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் டிம் டேவிட்டின் ஹீரோ இன்னிங்ஸால் 17 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது ஆஸ்திரேலியா.
இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து போராடியது. அதற்குபிறகு 4வது வீரராக களமிறங்கிய 22 வயது டெவால்ட் பிரேவிஸ் 12 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் என விளாசி ஆஸ்திரேலியா பவுலர்களை துவைத்தெடுத்தார்.
41 பந்துகளில் சர்வதேச டி20 சதத்தை பதிவுசெய்த பேபி ஏபிடி, தென்னாப்பிரிக்காவிற்காக இளம் வயதில் டி20 சதமடித்த வீரராக மாறி சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் 56 பந்தில் 125 ரன்களை அடித்த பிரேவிஸ், ஆஸ்திரேலியாவில் அதிகபட்ச டி20 ஸ்கோர் அடித்த வீரராகவும் மாறினார்.
டெவால்ட் பிரேவிஸின் அதிரடியால் 20 ஓவரில் 218 ரன்களை குவித்தது மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.
219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிவரும் ஆஸ்திரேலியா அணியில், 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என விளாசிய டிம் டேவிட் பயமுறுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்ஃபார்மில் இருந்துவரும் டிம் டேவிட்டை தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பவுலர் ரபாடா 50 ரன்னில் வெளியேற்ற ஆஸ்திரேலியா தடுமாறி வருகிறது.
வெற்றிபெற 26 பந்துக்கு 68 ரன்னுக்கு தேவை என்ற நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா. இருப்பினும் அடுத்த 3 விக்கெட்டுகளையும் உடனே இழந்தது. இறுதியில் 165 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆக தென்னாப்ரிக்கா அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சதம் விளாசிய பிரேவிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.