Laura Wolvaardt x page
கிரிக்கெட்

”இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்” - கம்மின்ஸ் போல எச்சரித்த தென்னாப்ரிக்க கேப்டன்!

”இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்” என தென்னாப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட் எச்சரித்துள்ளார்.

Prakash J

”இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்” என தென்னாப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட் எச்சரித்துள்ளார்.

8 அணிகள் பங்கேற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இறுதிப்போட்டிக்கு இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முன்னேறின. இந்த இறுதிப்போட்டி, இன்று நவி மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா என இரு அணிகளும் முதல்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட முயலும் என்பதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால், மைதானத்தில் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

harmanpreet kaur, Laura Wolvaardt

மேலும், ரசிகர்களின் ஆதரவும் அவர்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வால்வார்ட், "இறுதிப்போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவோம். இது மைதானத்தை அமைதியாக்கும் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 679 ரன்கள் எடுத்தது போலவே, இறுதிப் போட்டியும் அதிக ஸ்கோரிங் கொண்டதாக இருக்கும். அதனால்தான் நாம் மிகவும் அமைதியாக இருக்க முடிந்தால், அது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ரசிகர்கள் கூட்டம் மற்றும் சத்தம் என இன்றைய போட்டியில் நிறைய இருக்கும். நாம் முடிந்தவரை உறுதியாக இருக்க வேண்டும், இந்த தருணத்திலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் முடிந்தவரை கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Laura Wolvaardt

தென்னாப்பிரிக்க கேப்டனின் இந்தப் பேச்சு 2023இல் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸின் பேச்சை நினைவுபடுத்தியதாக உள்ளது. 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக பேசிய பேட் கம்மின்ஸ், "1.3 லட்சம் ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதைவிட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளை எங்களின் இலக்கு அதுவாகத்தான் இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார். 2023ஆம் ஆண்டு இந்திய ஆடவர் அணி தோல்வியே தழுவாத நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தாரை வார்த்தது குறிப்பிடத்தக்கது.