U19 South Africa Women's team x
கிரிக்கெட்

5 பேர் டக்அவுட்.. 4 பேர் 1 ரன்.. 16 ரன்னுக்கு ஆல்அவுட்.. சமோவா அணியை சிதறடித்த தென்னாப்ரிக்கா!

ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையில் சமோவா அணியை 16 ரன்னுக்கு ஆல்அவுட் செய்து அசத்தியது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.

Rishan Vengai

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.

டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, சமோவா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், நைஜீரியா முதலிய அணிகள் பங்கேற்றுள்ளன.

U19 Womens T20 World Cup 2025

41 போட்டிகள் நடைபெறவிருக்கும் இந்த தொடரில், இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இலங்கை, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் சமோவா அணிகளுக்கு இடையேயான போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 16 ரன்னில் சமோவாவை ஆல் அவுட் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

16 ரன்னுக்கு ஆல்அவுட்..

மலேசியாவின் சரவாக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் சமோவே யு19 மகளிர் அணி பேட்டிங் செய்தது. வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியான சமோவா, பலம்வாய்ந்த தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 9.1 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் 6 எக்ஸ்ட்ரா ரன்களும் அடங்கும்.

U19 Samoa Women's team

5 பேட்டர்கள் 0 ரன்னும், 4 பேர் 1 ரன் மட்டுமே எடுக்க, இரண்டு பேர் 3 ரன்களை எடுத்தனர். அபாரமாக பந்துவீசிய நினி 2 ஓவரில் 4 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

17 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 10 பந்திலேயே 17 ரன்களை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

இந்திய அணியை பொறுத்தவரையில் தங்களுடைய முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்திருக்கும் இந்தியா, நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் தொடரை நடத்தும் நாடான மலேசியாவை எதிர்கொள்கிறது.