கேப் டவுனில் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் செஸ்ஸனில் விக்கெட்டே இழக்காமல் 148 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை சிக்கலில் விட்டது. மார்க்ரம் அரைசதமடித்து திடமாக நின்று, அக்கர்மேன் 95 ரன்னில் விக்கெட் இழந்தார்.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தரமான கம்பேக் கொடுத்த தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 99 ரன்னுக்கு சுருட்டி வெற்றிபெற்றது. 1-1 என தொடர் சமன் பெற்ற நிலையில், தொடரை முடிவுசெய்யும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இன்று தொடங்கியுள்ளது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிர்க்கா அணி முதல் செஸ்ஸனில் விக்கெட்டையே இழக்காமல் 148 ரன்கள் சேர்த்துள்ளது. எய்டன் மார்க்ரம் ஒருபுறம் திடமாக நின்று அரைசதமடிக்க, மார்க்ஸ் அக்கர்மேன் அற்புதமாக விளையாடி 80 ரன்கள் அடித்து மிரட்டினார்.
இந்தசூழலில் அக்கர்மேன் சதமடிப்பார் என நினைத்த நிலையில் 95 ரன்னில் நாதன் லயனிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். சமீபத்திய அப்டேட்டின் படி 158/1 என தென்னாப்பிரிக்கா விளையாடி இருக்கிறது.