மார்கோ யான்சன் cricinfo
கிரிக்கெட்

ஒரே வெற்றி.. AUS 3வது இடம்; இலங்கை 5வது இடம்.. WTC புள்ளி பட்டியலில் 2வது இடம் சென்ற தெ.ஆப்ரிக்கா!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி WTC புள்ளிப் பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்த இடமான 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியானது டர்பன் ஆடுகளத்தில் தொடங்கி நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

marco jansen

அதற்குபிறகு விளையாடிய தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி தென்னாப்பிரிக்காவின் தரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 42 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய மார்கோ யான்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

11 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்கோ யான்சன்..

149 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் சதமடித்து அசத்தினர். 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்களை குவித்து டிக்ளார் செய்த தென்னாப்பிரிக்கா, இலங்கைக்கு 516 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

stubbs

மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 83 ரன்களும், கேப்டன் டி சில்வா 59 ரன்களும் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்கோ யான்சன், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி 11 விக்கெட்டுகளுடன் போட்டியை முடித்தார்.

WTC புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு தாவிய தென்னாப்பிரிக்கா..

இலங்கை அணியை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி WTC புள்ளி பட்டியலில் 2வது இடத்திலிருந்து ஆஸ்திரேலியாவை 3வது இடத்திற்கு தள்ளி இரண்டாவது இடத்தில் சிம்மாசனமிட்டுள்ளது.

3வது இடத்திலிருந்த இலங்கை அணி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட பட்டியலின் படி, இந்தியா முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றன.

தென்னாப்பிரிக்கா

இலங்கை அணி அடுத்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே WTC இறுதிப்போட்டிக்கான ரேஸில் நிலைத்திருக்க முடியும்.