2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் நான்கு அணிகளில் இங்கிலாந்தின் பெயரையும் பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கூறியிருந்தனர்.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு அணியாக களம்கண்ட இங்கிலாந்து அணி, முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 351 ரன்கள் குவித்தபோதும் படுதோல்வியை சந்தித்தது. அதற்குபிறகு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் 8 ரன்னில் கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்டு அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்டு வெளியேறியது.
சாம்பியன்ஸ் டிராபியின் மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது இங்கிலாந்து அணி.
இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவை 200 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு இருந்தது.
ஆனால் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் கடைசி நம்பிக்கையும் பறிபோனது.
இந்த சூழலில் தென்னாப்பிரிக்கா அணி 4வது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது. 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடும் தென்னாப்பிரிக்கா அணி, இந்த போட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.
நாளைய போட்டியின் முடிவின் படி இந்தியா அரையிறுதியில் யாரை எதிர்கொள்ளும் என்பது தெளிவுபெறும்.