ganguly, imran khan x page
கிரிக்கெட்

இம்ரான் கான் உடல்நிலை விவகாரம் | பாகிஸ்தானுக்கு சவுரவ் கங்குலியும் அழுத்தம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் இம்ரான் கானுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளார்.

Prakash J

சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நலம் மோசமடைந்து வருவதாகவும், அவரது கண்பார்வை குறைந்து வருவதாகவும் அண்மையில் செய்தி வெளியாகின. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டி பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்திய ஜாம்பவான் சவுரங் கங்குலியும் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சிலவற்றில் தண்டனைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலாவில் தனிமைச் சிறையில் உள்ளார். இதற்கிடையே, அவருடைய மரணம் பற்றிய வதந்தி செய்திகள் உலகம் முழுவதும் பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதனை, பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MOIB) மறுத்திருந்தது. இந்த நிலையில், சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நலம் மோசமடைந்து வருவதாகவும், அவரது கண்பார்வை குறைந்து வருவதாகவும் அண்மையில் செய்தி வெளியாகின. சமீபத்திய செய்திகளின்படி, இம்ரான் கான் தனது வலது கண்ணில் சுமார் 85 சதவீதம் பார்வையை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, கிரெக் சேப்பல், பெலிண்டா கிளார்க், மைக்கேல் அதர்டன், நாசர் ஹுசைன், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், இயன் சேப்பல் , ஆலன் பார்டர், மைக்கேல் பிரெர்லி, டேவிட் கோவர், கிம் ஹியூஸ், கிளைவ் லாயிட், ஸ்டீவ் வாக் மற்றும் ஜான் ரைட் உள்ளிட்ட 14 கேப்டன்கள் இம்ரான் கானுக்கு 'உடனடி மருத்துவச் சிகிச்சை' வழங்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இம்ரான் கான்

அவருக்கு முறையான மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வலியுறுத்தி பாகிஸ்தான் அரசாங்கத்திடமும், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடமும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் யாரும் இந்த மனுவில் கையெழுத்திடவில்லை. அதேநேரத்தில், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் ஷாஹித் அப்ரிடி உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இம்ரானுக்கு முறையான மருத்துவ சேவையை உறுதி செய்யுமாறு சமூக ஊடகங்கள் மூலம் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் இம்ரான் கானுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், “முன்னாள் கேப்டன்கள் செய்தது மிகச்சரியான செயல். இம்ரான் கானின் உடல்நிலை விரைவில் தேற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். முதலில் ஒரு கிரிக்கெட் கேப்டனாகவும், அதன்பின் ஒரு பிரதமராகவும் பாகிஸ்தான் நாட்டை உலக வரைபடத்தில் முக்கிய இடத்திற்குக் கொண்டு சென்றவர் இம்ரான் கான். அப்படிப்பட்ட ஒருவரைப் பாதுகாப்பது அந்த நாட்டின் கடமை. பாகிஸ்தான் அரசு அதைச் செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவக் குழு, இம்ரானின் பார்வையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. "சிறையில் இம்ரானை சந்தித்த இரண்டு மருத்துவர்கள், சில வாரங்களாக சுவரில் உள்ள கடிகாரத்தை அவரால் பார்க்க முடியவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியதாகக் கூறினர். ஆனால் இப்போது அதை மட்டுமல்ல, கடிகார முள்களையும் பார்க்க முடிகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, இது நம்பமுடியாத முன்னேற்றம்" என்று பிடிஐ பொதுச் செயலாளர் சல்மான் அக்ரம் ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் கூற்றை இம்ரான் குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர். முன்னதாக, இம்ரான் கான் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என்றும், பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள் என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மொக்சின் நக்வி தெரிவித்திருந்தார்.