ganguly - virat web
கிரிக்கெட்

”விராட் கோலி உலகம் கண்ட சிறந்த ஒயிட்-பால் கிரிக்கெட் வீரர்..” - சவுரவ் கங்குலி

”சாம்பியன்ஸ் டிரோபியில் விராட் கோலியின் ஃபார்ம் குறித்த எந்த கவலையும் இல்லை, அவர் இதுவரை உலகம் கண்ட சிறந்த ஒயிட்-பால் கிரிக்கெட் வீரர்” - இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தன்னுடைய 30வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

கோலி ஃபார்மிற்கு திரும்பிவிட்டார் 1-0 என முன்னிலை பெற்றுவிட்டோம், இனி தொடரை இந்தியா வெல்லும் என்று நினைத்த போது விராட் கோலி அதற்குபிறகு சோபிக்கவில்லை. கோலியின் வீழ்ச்சியால் இந்திய அணி முதல் போட்டியை வென்றதற்கு பிறகு ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் 3-1 என தோல்வியை சந்தித்தது.

virat kohli - rohit sharma

இந்த சூழலில் இந்திய அணி பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிரோபியில் விளையாடவிருக்கிறது. இதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்த கவலை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிரோபியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஃபார்ம் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, இரண்டு வீரர்களும் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்கள், அவர்களின் ஆட்டம் சிறந்ததாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுவரை உலகம் கண்ட சிறந்த ஒயிட்-பால் வீரர் கோலி..

ரெவ் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் சவுரவ் கங்குலி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருடைய சமீபத்திய ஃபார்ம் குறித்த கவலையை துடைத்துவைத்தார்.

விராட் கோலி

விராட் கோலி குறித்து பேசிய அவர், “விராட் கோலி வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே விளையாடக்கூடிய கிரிக்கெட் வீரர். ஒரு கிரிக்கெட் வாழ்க்கையில் 80 சர்வதேச சதங்கள் அடிப்பது என்பது எனக்கு நம்பமுடியாத ஒன்று, அவர் உலகம் கண்ட மிகச்சிறந்த ஒயிட்-பால் வீரர்.

பெர்த்தில் சதம் அடித்த பிறகு அவர் பேட்டிங் செய்த விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் அதற்கு முன் இந்தியாவில் பேட்டிங் செய்வதில் போராடினார், ஆனால் பெர்த்தில் ஒரு அற்புதமான சதத்திற்குப் பிறகு, அவருக்கு இது ஒரு பெரிய தொடராக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் வேறு நடந்தது.

virat kohli

உலகில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் பலங்களும், பலவீனங்களும் உள்ளன, உலகில் பலத்தை மட்டுமே கொண்டிருக்கும் எந்த வீரரும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடும்போது, உங்கள் பலவீனங்களை எவ்வாறு மாற்றியமைக்கிறீர்கள் என்பதில் தான் எல்லாமே இருக்கிறது.

விராட் கோலியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு பெரும் சவாலாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபியில் அவரது ஃபார்மைப் பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை, ஏனென்றால் நான் முன்பு சொன்னது போல், அவர் இதுவரை உலகம் கண்ட சிறந்த ஒயிட்-பால் வீரர்” என்று கூறினார்.

சாம்பியன்ஸ் டிரோபியில் வேறொரு ரோகித்தை  பார்ப்பீர்கள்..

ரோகித்தின் ஃபார்ம் குறித்து பேசிய கங்குலி, "ரோகித் சர்மா வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் தனித்துவமானவர், சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியவுடன் நீங்கள் வேறுஒரு ரோகித் சர்மாவைப் பார்ப்பீர்கள்" என்று கூறினார்.

ரோகித் சர்மா

மேலும், “2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பையின் செயல்திறனை வைத்து பார்த்தால், 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்கான போட்டியாளர்களில் இந்திய அணியும் இருக்கிறது” என்று கங்குலி தெரிவித்துள்ளார்.