இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர், இரண்டு ஐசிசி கோப்பைகளை வாங்கிக் கொடுத்திருக்கும் நிலையில், அவருக்கு 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குளித்த இந்திய அணி, நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது. அதன்மூலம் 3 முறை டி20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி, ஹோம் கிரவுண்டில் டி.20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 கோப்பை வென்ற முதல் அணி என 3 உலக சாதனைகளை படைத்து அசத்தியது. இந்த வெற்றிக்குப் பின்னால் இந்திய அணியின் ஓட்டுமொத்த உழைப்பும் இருக்கிறது. அபிஷேக், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, நிலக் வர்மா என தொடர் முழுவதும் ஒவ்வொருவரும் தங்களது திறமையை நிரூபித்தனர். மேலும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீரின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.
இந்திய அணியின் வெற்றியைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், கவுதம் காம்பீருக்கு மேலும் சவால் காத்திருப்பதாக முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “காம்பீரின் உண்மையான சவால் இன்னும் ஒரு வருடத்திற்குப் பிறகு, 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில்தான் காத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் வானிலையும், அங்குள்ள மைதானங்களும் அவருக்கு பெரும் சவாலாக அமையும். ஆனால் தற்போதுள்ள வலுவான அணியை வைத்து அவர் அந்த சவாலை எளிதில் முறியடிப்பார். அந்த நம்பிக்கை தனக்கு இருக்கிறது. கடந்த 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. மேலும், 2027 உலகக்கோப்பை மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என்பதால், கோப்பையை வென்று கொடுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு கம்பீருக்கு உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கம்பீர் அணியை இன்னும் மேம்படுத்த வேண்டும். ஆடுகளத்தைப் பற்றி அதிகமாக சிந்திப்பதை அவர் தவிர்க்க வேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் சமமான மைதானங்களில் விளையாடினால் மட்டுமே சிறப்பான முடிவுகள் கிடைக்கும். காம்பீர் ஒரு மிகச்சிறந்த பயிற்சியாளர். குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் அபாரமாக செயல்படுகிறார். அவருக்கு நாம் இன்னும் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர், 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை என 2 ஐசிசி கோப்பைகளை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.