முதல் ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கான இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், இந்திய அணி பல நேரங்களில் தங்களுடைய கையில் இருந்த போட்டியை இங்கிலாந்திற்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது.
அந்தவகையில் 5வது டெஸ்ட்டிலும் இங்கிலாந்துக்கு எதிராக 374 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்திய அணி, முக்கியமான தருணத்தில் ஹாரி ப்ரூக் கேட்ச்சை தவறவிட்டு சொதப்பியது.
137/4 என மாற வேண்டிய போட்டி, ஹாரி ப்ரூக்கின் அற்புதமான சதத்தால் 301/4 என மாறி இந்தியாவை வேதனைப்படுத்தியது.
லண்டன் ஓவலில் நடந்துவரும் இந்தியா vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டின் மிக முக்கியமான தருணத்தில், முகமது சிராஜ் ஒரு பெரிய தவறை செய்தார்.
35வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் பந்தை லெக் சைடில் சிக்சருக்கு தூக்கி அடித்தார் ஹாரி ப்ரூக். பவுண்டரி லைனில் லாங்-லெக்கில் பீல்டிங் செய்த முகமது சிராஜ், ஹாரி புரூக்கின் கேட்சை பிடித்தார். ஆனால் கேட்ச்சை பிடித்துவிட்டபிறகு பேலன்ஸை இழந்த சிராஜ், அவரது வலது காலை பவுண்டரி குஷனில் வைத்ததால் எல்லாம் மாறிப்போனது.
அதுவரை விக்கெட் என மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணா, கேட்ச் சிக்சராக மாறியபிறகு விரக்தியை வெளிப்படுத்தினார். கேட்ச் பிடித்தபோது 19 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ப்ரூக், அதற்குபிறகு அதிரடியாக விளையாடி 98 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு சாதகமாக மாற்றினார்.
இந்த சூழலில் முக்கியமான தருணத்தில் ஹாரி ப்ரூக் கேட்ச்சை தவறவிட்டதற்காக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கோரினார் சிராஜ்.