கழுத்து வலி காரணமாக, கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் ஷுப்மன் கில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 159 மற்றும் 153 ரன்கள் அடித்தது. முதல் இன்னிங்ஸில் 189 ரன்னுக்கு ஆட்டமிழந்த இந்தியா, 124 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
ஆனால், மிகக் குறைந்த இலக்கைக்கூடத் தொடமுடியாமல் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், 15 ஆண்டுகளுக்கு பிறகு டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணியின் இத்தகைய தோல்வியை கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கழுத்து வலி காரணமாக, கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் ஷுப்மன் கில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். தவிர, அவர் விமானப் பயணத்தை மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, 2வது டெஸ்ட் நவம்பர் 22ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இதற்காக அணி வீரர்கள் நவம்பர் 19ஆம் தேதி அங்குச் செல்ல உள்ளனர்.
ஆனால், இந்தப் பயணத்தை ஷுப்மன் கில் தவற விடுவார் எனவும், அதுபோல் நாளை கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் இறுதிப் பயிற்சியையும் அவர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக, ஷுப்மன் கில் முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கியபோது, கழுத்து வலி காரணமாக 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் ரிடையர்டு கட் முறையில் பெவிலியன் திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, இரண்டாவது டெஸ்டில் ஷுப்மன் கில் பங்கேற்காமல் போனால், அவருக்குப் பதில் சாய் சுதர்சனோ அல்லது தேவ்தத் படிக்கலோ அணிக்குத் திரும்புவார்கள் எனக் கூறப்படுகிறது.