பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் களமிறங்குவாரா?

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் சென்னையில் இருந்து அகமதாபாத் புறப்பட்டு சென்றதால், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட சென்னை வந்திருந்தபோது, ஷுப்மன் கில்லுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனால் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. ஷுப்மன் கில் சென்னையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்நதார். இந்த சூழலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஷுப்மன் கில் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். அங்கு வரும் 14ஆம் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அணி வீரர்களுடன் இணைந்து அவர் பயிற்சி மேற்கொள்வாரா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

ஷுப்மன் கில் காய்ச்சல் பாதிப்பில் இருந்து குணமடைந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்றே விளையாட்டு விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேநேரம் கில் அகமதாபாத் புறப்பட்டுச் சென்றதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com