ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை விடுவித்துவிட்டு, அந்த இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து செய்தித் தொகுப்பை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக ஜொலித்த ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றனர். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் விளையாடுவதாக தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்தும் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆசியக் கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், ஒருநாள் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை விடுவித்துவிட்டு, அந்த இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, ஆசியக் கோப்பைக்கான டி20ஐ அணியின் துணைத் தலைவராக டெஸ்ட் கேப்டனான ஷுப்மான் கில்லை நியமித்தது. மேலும், இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரையே மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக்கும் முயற்சியில் பிசிசிஐ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, ஆசியக் கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பரிசீலிக்கப்பட்டபோது, இறுதிக்கட்டத்தில் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், அவரது சமீபத்திய செயல்திறன், குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபியில், அவரது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இதையடுத்து, வாரியமும் தேர்வாளர்களும் ஒருநாள் போட்டிகளுக்கு வேறு வழியைப் பரிசீலித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. அந்த வகையில், 2027 உலகக் கோப்பை வரை 50 ஓவர் வடிவத்தில் இந்தியாவை வழிநடத்த ஐயர் நீண்டகால விருப்பமாக பார்க்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. இந்திய ஒருநாள் அணியின் அடுத்த கேப்டனாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
ஆயினும், அவரது தலைமைத்துவ திறனை பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஆனாலும் ஐயரின் பதவி உயர்வுக்கான நேரம், சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த ரோஹித் சர்மாவின் முடிவைப் பொறுத்தது. தற்போது ஒருநாள் அணியை வழிநடத்திவரும் ரோஹித், அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளார். அது, அவருடைய இறுதிப் போட்டியாக இருக்கலாம் என்ற ஊகம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ரோஹித்துடன் பிசிசிஐ அதிகாரிகள் விவாதிப்பார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.