இங்கிலாந்தில் நடைபெறும் 10வது மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி அபார தொடக்கத்தை பெற்றுள்ளது. ஆனால் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் கணுக்காலில் காயமடைந்த ஸ்ரேயங்கா பாட்டில் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
12 அணிகள் பங்கேற்கும் 10ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஜூன் 12ஆம் தேதி தொடங்கியது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குருப் ஏவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-வில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்திலும், நெதர்லாந்தை 114 ரன்னில் சுருட்டி 96 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் ரன்விகிதமும் 3.9 என வலுவாகவே உள்ளது.
இந்தசூழலில் தான் நெதர்லாந்துக்கு எதிரான கடைசி போட்டியின்போது இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டிலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இக்காயம் காரணமாக அவர் மீதமிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார் என்றும், அவருக்கு பதிலாக லெக் ஸ்பின்னர் பிரேமா ராவத் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் நடக்கவிருக்கும் முக்கியமான போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு இந்திய அணி விளையாடவிருக்கிறது. பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதற்கு முன், தென்னாப்பிரிக்காவை வீழ்த்திவிட்டால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உறுதிசெய்யப்படும் என்பதால் அந்தபோட்டி மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.