MLC T20 தொடக்கம்| 52 பந்தில் 113* ரன்கள் விளாசிய டூபிளஸி.. சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
அமெரிக்காவில் தொடங்கிய மேஜர் லீக் கிரிக்கெட்டின் நான்காவது சீசனில் டல்லாஸ் மைதானத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சியாட்டில் ஓர்காஸை எதிர்கொண்டது. 221 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கேப்டன் டூபிளஸி 52 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 113* ரன்கள் குவித்து, அணிக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றுத்தந்தார்.
ஐபிஎல் முடிந்ததையொட்டி தற்போது அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் பிரான்சைஸ் டி20 தொடர் தொடங்கியுள்ளது. 34 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் ‘சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், MI நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம்’ முதலிய 6 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
இந்த 6 MLC அணிகளில் நான்கு அணிகள் ஐபிஎல் உரிமையாளர்களின் அணிகளாகும். இதில் MI நியூயார்க் (மும்பை இந்தியன்ஸ்), டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) மற்றும் சியாட்டில் ஓர்காஸ் (டெல்லி கேபிடல்ஸ்) ஆகியவை 4 ஐபிஎல் உரிமையாளர்களால் நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியின் நான்காவது சீசன் இன்று தொடங்கியது.
அசத்தல் வெற்றிபெற்ற TSK..
டல்லாஸ் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சியாட்டில் ஓர்காஸ் அணி 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கி 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என துவம்சம் செய்த டிம் சீஃபர்ட் 66 பந்தில் 104 ரன்கள் அடித்து அசத்தினார்.
221 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டூபிளஸி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 9 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 217 ஸ்ட்ரைக்ரேட்டில் 113 ரன்கள் அடித்து அசத்தினார். டூபிளஸியின் அற்புதமான ஆட்டத்தின் காரணமாக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

