உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்திய ரசிகர்கள் சிஎஸ்கேவின் மஞ்சள் ஜெர்சியில் வருமாறு ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி அழைப்பு விடுத்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் தொடங்கவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போட்டிகள் இந்தியாவிற்குத் திரும்பியுள்ள நிலையில், உள்நாட்டில் நடைபெறும் முதற்கட்ட லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை, வெறும் ரூ.100 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்திய ரசிகர்கள் சிஎஸ்கேவின் மஞ்சள் ஜெர்சியில் வருமாறு ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், “மஞ்சள் நிறமாக தோனியின் சிஎஸ்கே ஜெர்ஸியை இந்திய ரசிகர்கள் அணிந்து வந்தால் எனக்குப் பிடிக்கும். அது மிகவும் சிறப்பாக இருக்கும். கூட்டத்தில் மஞ்சள் நிறமும் இருந்தால் நன்றாக இருக்கும். உங்களுக்குப் பிடித்தமான அணியாக எங்களை முத்திரை குத்தியுள்ளீர்கள். அதற்கு நன்றி. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். இதுவரை விளையாடியதிலேயே மிகப்பெரிய உலகக் கோப்பையாக இருக்கும். இங்கு நல்ல ஆதரவும் ஒன்றில் மிகையான மனநிறைவும் கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்த கலாசாரம் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி, அக்டோபர் 1ஆம் தேதி, தன்னுடைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தூரில் எதிர்கொள்ள இருக்கிறது.