india, Shoaib Akhtar x page
கிரிக்கெட்

மீண்டும் சாம்பியன்.. பொறாமையில் இந்தியாவை கேலி செய்த சோயிப் அக்தர்!

இந்திய அணியின் ஆதிக்கம் கிரிக்கெட்டையே அழித்துவிட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Prakash J

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை மீண்டும் உச்சி முகர்ந்துள்ளது. இதைப் பார்த்து பொறாமை கொண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், இந்திய அணியின் இந்த ஆதிக்கம் கிரிக்கெட்டையே அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக இந்திய அணி வென்று சாதித்திருப்பதே, இன்று உலகம் முழுவதும் பேசப்படும் செய்தியாக இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பின்னால் இந்திய அணியின் ஒட்டுமொத்த உழைப்பும் இருக்கிறது. அபிஷேக், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பும்ரா என ஒவ்வொருவரும் தங்களது திறமையை நிரூபித்தனர். அதன் பயனே இந்திய அணி கோப்பையை கையில் ஏந்தியது. இதனால், இந்திய அணியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானோ பொறாமை கொண்டு இந்திய அணியைத் தாக்கி வருகிறது. ஏற்கெனவே அவ்வணியின் முன்னாள் வீரர் முகமது அமீர், ’இந்திய அணி ஃபைனல் செல்லாது எனவும், அது கோப்பையை வெல்லாது’ எனவும் ஆரூடம் தெரிவித்திருந்தார். ஆனால், இதை இந்திய ரசிகர்கள் கடுமையாகச் சாடியிருந்தனர். தற்போது இந்திய அணி, கோப்பையை உச்சி முகர்ந்து சாதித்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாகச் சாடியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “தெரு ஒன்றில் உள்ள பணக்கார வீட்டுப் பையன், அக்கம்பக்கத்தில் இருக்கும் ஏழைக் குழந்தைகளை எல்லாம் அழைத்து 'வாங்க கிரிக்கெட் விளையாடலாம்' என்று கூறுவதைப் போலத்தான் இந்தியா நம்முடன் நடந்துகொள்கிறது. எட்டு அணிகள் இருந்தால், அதில் நான்கு அணிகளை மட்டும் வைத்துக்கொண்டு, அந்த நான்கில் இருந்து மூன்றை மீண்டும் அழைத்து விளையாடி, இறுதியில் 'பாருங்கள், நான் ஜெயித்துவிட்டேன்' என்று இந்தியா சொல்கிறது. இதுதான் தற்போது நடக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டார்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவருடைய விமர்சனத்திற்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். முன்னதாக அவர், ”இந்திய அணி பலமான அணியாக இருந்தாலும், கிரிக்கெட்டின் நலனுக்காக நியூசிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என் நான் விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். இந்திய அணியின் வெற்றியை அவரால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலேயே, இப்படிச் சாடியுள்ளார் என ரசிகர்கள் கருதுகின்றனர்.