நியூசிலாந்து அணியுடன் நடந்த நான்காவது டி20 போட்டியில், இந்தியா 165 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி தோல்வியடைந்தது. ஷிவம் துபே 15 பந்தில் 7 சிக்சர்களுடன் அரைசதம் அடித்து அசத்தியபோதும், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் நடுவில் விக்கெட்டுகள் சரிந்ததால் வெற்றி கைவிடப்பட்டது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று உள்ளது. முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் 3 போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிம் சைஃபர்ட் 36 பந்தில் 62 ரன்கள் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இந்தப்போட்டியிலாவது அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 15 பந்தில் 24 ரன்கள் அடித்து வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சீட்டுகட்டுகள் போல சரிய 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
ஆட்டம் கைமீறிப்போனபோது களமிறங்கிய ஷிவம் துபே 7 சிக்சர்களை நாலாபுறமும் பறக்கவிட்டு 15 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். 23 பந்தில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 65 ரன்கள் அடித்த துபே இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்தபோது, ஹர்சித் ராணா அடித்தபந்து பவுலரின் கையில் பட்டு நான் ஸ்ட்ரைக்கில் நின்ற துபேவை ரன் அவுட்டாக்கியது. துரதிருஷ்டவசமாக துபே அவுட்டான நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா 165 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.