shami injury
shami injury web
கிரிக்கெட்

IPL போச்சு, டி20 WC போச்சு! NCA கூறியதை மதிக்காத ஷமி! இப்போது எல்லாமே கைமீறி போய்விட்டது-நடந்ததென்ன?

Rishan Vengai

கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முழுக்க அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போதே பந்துவீசுவதில் சிரமப்பட்டார். அதனால் தான் கடைசி நேரத்தில் கூட அவரால் பந்துவீச முடியாமல் போனது.

பின்னர் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமி, இங்கிலாந்தில் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது காயம் குணமடையாத நிலையில் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும், அதனால் எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடரில் முகமது ஷமி பங்கேற்கமாட்டார் என்றும் பிடிஐ செய்திவெளியிட்டுள்ளது.

Shami

இந்நிலையில் முகமது ஷமியை தேசிய கிரிக்கெட் அகாடமி முன்பே அறுவை சிகிச்சை செய்ய சொன்னதாகவும், ஆனால் அதை ஏற்காமல் தற்போது 2 மாதங்கள் தாமதப்படுத்திய பிறகு அறுவை சிகிச்சைக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது?

கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பந்துவீசுவதற்கு சிரமப்பட்ட முகமது ஷமி, பின்னர் அர்ஜுனா விருதை பெற்றபிறகு ஓய்விலிருந்து வந்தார். அவர் காயம்காரணமாக சிகிச்சையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியான நிலையில், எப்படியும் டி20 உலகக்கோப்பைக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பு தற்போது உடைந்துள்ளது.

லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த முகமது ஷமி, சிகிச்சை பலனளிக்காத நிலையில் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால், அவர் அடுத்த 5-6 மாதங்கள் இந்திய அணிக்கு நிச்சயம் கிடைக்க போவதில்லை. அதனால் ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை, அக்டோபர் நவம்பரில் நடக்கவிருக்கும் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடரில் கூட ஷமி பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.

shami

இந்நிலையில் இவ்வளவு மாதங்கள் ஏன் ஷமி அறுவை சிகிச்சை செய்யவில்லை, தேசிய கிரிக்கெட் அகாடமி என்ன செய்துகொண்டிருந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் பிசிசிஐ வட்டாரங்களில் கிடைத்திருக்கும் தகவலின் படி தேசிய கிரிக்கெட் அகாடமி ஷமியை முதலிலேயே அறுவை சிகிச்சை செய்ய கூறியதாகவும், ஆனால் அவர் ஊசிமூலம் சிகிச்சை பெற்று சரியாகிறதா என்று பார்க்கலாம் என சோதனை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேசிய கிரிக்கெட் அகாடமி கூறியது என்ன?

இதுகுறித்து பிடிஐ இடம் பேசியிருக்கும் அதிகாரி ஒருவர், “ஜனவரி கடைசி வாரத்தில் இடது கணுக்காலில் ஏற்பட்ட பிரச்னைக்கு சிறப்பு ஊசி போடுவதற்காக ஷமி லண்டனில் இருந்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு, லேசாக ஓட ஆரம்பித்து அதன்பிறகு எப்படியிருக்கிறது என்பதை பொறுத்து அறுவை சிகிச்சை எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்கள். ஆனால் ஊசி வேலை செய்யவில்லை, இப்போது அறுவை சிகிச்சை மட்டுமே எஞ்சியுள்ளது.. அவர் விரைவில் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்து புறப்படுவார். ஐபிஎல் விளையாடுவாரா என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.

shami

மேலும், “ஷமி அறுவை சிகிச்சைக்கு நேரடியாகச் சென்றிருக்க வேண்டும், அதுதான் என்சிஏவின் அழைப்பாக இருந்தது. இரண்டு மாத ஓய்வு மற்றும் ஊசி சரியாக வேலை செய்யாது, அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுங்கள் என சொல்லப்பட்டது. ஆனால் அதை அவர்கள் பின்பற்றவில்லை, தற்போது என்சிஏ கூறியதை போலவே நடந்துள்ளது. அவர் இந்திய அணியின் சொத்து, ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணியில் அவர் இடம்பெறுவது முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.