shamar joseph
shamar joseph IPL
கிரிக்கெட்

அடித்தது ஜாக்பாட்! IPL-ல் களமிறங்கும் ஷமர் ஜோசப்! ரூ.3 கோடிக்கு அணியில் எடுத்த LSG!

Rishan Vengai

ஷமர் ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வரும் வரை, வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கு கூட வெஸ்ட் இண்டீஸ் அணி 21 வருடங்களாக போராடிவந்தது. அதேபோல ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து தோற்கடித்து 27 வருடங்கள் ஆகியிருந்தது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவை அதன் கோட்டையான கப்பா மைதானத்தில் வைத்து வீழ்த்துவதற்கு 56 ஆண்டுகள் முடியாமல் இருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி!

இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் நூற்றாண்டுகால தோல்வியின் வடுக்களை ஆற்றுப்படுத்துவதற்கு, இண்டர்நெட் வசதிகூட இல்லாத குக்கிராமத்தில் இருந்து ஷமர் ஜோசப் வரவேண்டியிருந்தது.

shamar

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்ற முதல் போட்டியின் முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை கைப்பற்றிய ஷமர், அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி கடந்த 17 வருடத்தில் இச்சாதனையை செய்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரராக மாறினார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவை வீழ்த்தவே முடியாத கப்பா மைதானத்தில் வைத்து வீழ்த்தி, 56 ஆண்டுகால தாகத்தை தீர்த்துவைத்தார். முப்பது ஆண்டுகளாக டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுவந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷமரின் 7 விக்கெட்டுகள் என்ற ஹீரோ ஸ்பெல்லால் முதல்முறையாக டெஸ்ட் தொடரை சமன்செய்து சாதனை படைத்தது.

shamar

பங்கேற்ற முதல் டெஸ்ட் தொடரிலேயே தொடர்நாயகன் விருதை வாங்கிய ஷமர் ஜோசப், ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸால் மரியாதை செய்யப்பட்டார். ஒரே தொடரில் ஹீரோவான ஷமர் ஜோசப், வறுமையை ஒழிக்கும் பொருட்டு தற்போது ஐபிஎல்லில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

லக்னோ அணியில் களமிறங்கும் ஷமர் ஜோசப்!

ஐபிஎல் தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் செய்தியின் படி, “லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் லீடிங் வேகப்பந்துவீச்சாளராக இருந்த இங்கிலாந்து வீரர் மார்க் வுட்டுக்கு மாற்றுவீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் இணைக்கப்பட்டுள்ளார். வரவிருக்கும் 2024 ஐபிஎல் தொடரில் ரூ.3 கோடிக்கு ஷமர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடவுள்ளார்” என செய்தி வெளியிட்டுள்ளது.

வறுமையின் பின்புலத்தில் இருந்து வந்த ஷமர் ஜோசப், ஐபிஎல்லில் லக்னோ அணியில் விளையாடவிருப்பதை இந்திய ரசிகர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.