india web
கிரிக்கெட்

”உலக 11 அணியை அனுப்பினாலும், துபாயில் இந்தியாவை வீழ்த்த முடியாது” – முன்னாள் பாக். கேப்டன் புகழாரம்

2025 சாம்பியன்ஸ் டிராபியில் துபாய் மைதானத்திற்கு ஏற்ப சிறந்த அணியை இந்தியா கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு எதிராக உலகின் சிறந்த 11 பேர்கொண்ட அணியை அனுப்பியிருந்தாலும் வென்றிருக்க முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் புகழ்ந்துள்ளார்.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் வீரர்கள், லோயர் ஆர்டர் பினிசிங் வீரர்கள் தொடங்கி வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் மற்றும் விக்கெட் கீப்பர் என அனைத்து வீரர்களும் தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விளையாடிய 11 வீரர்களும் மேட்ச் வின்னர்களாக இருந்ததால், மற்ற எந்த அணியாலும் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை.

தொடர் முழுவதும் தோல்வியே அடையாமல் கோப்பை வென்ற இந்திய அணி, 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்று சாதனை படைத்தது.

2025 சாம்பியன்ஸ் டிராபி

இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய இந்திய அணியை பாராட்டியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, இந்தியா கோப்பை வெல்ல தகுதியான அணி என்று புகழாரம் சூட்டினார்.

அவர்களை உலக 11 அணியாலும் வீழ்த்தியிருக்க முடியாது..

சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் வெற்றி குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, ”அவர்கள் வெற்றி பெற தகுதியானவர்கள். உள்நாட்டு கிரிக்கெட், கட்டமைப்பு, அகாடமிகள் மற்றும் நல்ல கிரிக்கெட்டில் நீங்கள் முதலீடு செய்யும்போது, ​​அதற்கான பலன்களைப் பெறுவீர்கள்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்தியாவின் தேர்வு, நிலைமைகளுக்கு ஏற்ப சிறந்த ஒன்றாக இருந்தது. சந்தேகமே இல்லை... அது அவர்களின் தேர்வுக் குழுவின் அற்புதமான வேலை. ஆம், அவர்கள் தங்கள் அனைத்து போட்டிகளையும் ஒரே இடத்தில் விளையாடியதாலும், இடங்களை மாற்றாததாலும், அவர்களுக்கு நிலைமைகள் நன்றாக தெரியும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இந்திய கிரிக்கெட் அணி

ஆனால் அவர்களின் வெற்றிக்குப் பின்னால் அது ஒரு பெரிய காரணமாக இருந்தாலும், வெற்றிக்கான உண்மையான காரணம் அணித்தேர்வு தான் என்று நான் கூறுவேன். நான் துபாயில் விளையாடியதால் அது எனக்குத் தெரியும், சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு இங்கே மிகவும் முக்கியமானது. அவர்களின் தேர்வு மிகவும் நன்றாக இருந்தது.

தொடக்கம் முதல் மிடில் ஆர்டர் வரை சிறந்த பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என இந்திய அணியைப் பார்த்தால் - நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியின் சிறந்த உலக 11-ஐ உருவாக்கி, துபாயில் இந்தியாவுக்கு எதிராக விளையாட வைத்தாலும், இந்தியாவை வீழ்த்த முடியாது என்று நான் கூறுவேன்" என அவர் மேலும் புகழ்ந்து கூறினார்.