Rassie Van der Dussen
Rassie Van der Dussen Shashank Parade
கிரிக்கெட்

SAvNZ | வேன் டெர் டுசன் அதிரடி... தென்னாப்பிரிக்கா மீண்டும் வெற்றி..!

Viyan
போட்டி 32: தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து
முடிவு: 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி (தென்னாப்பிரிக்கா - 357/4; நியூசிலாந்து - 167 ஆல் அவுட், 35.3 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ரஸி வேன் டெர் டுசன்
பேட்டிங்: 118 பந்துகளில் 133 ரன்கள் (9 ஃபோர்கள், 5 சிக்ஸர்கள்)

இந்த உலகக் கோப்பையில் இலங்கை எதிர்த்து தாங்கள் ஆடிய முதல் போட்டியில் சதம் அடித்திருந்தார் வேன் டெர் டுசன். ஆனால் அடுத்த சில போட்டிகள் அவருக்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திடவில்லை.

Rassie van der Dussen | David Miller

vs ஆஸ்திரேலியா - 26 ரன்கள்
vs நெதர்லாந்து - 4 ரன்கள்
vs இங்கிலாந்து - 60 ரன்கள்
vs வங்கதேசம் - 1 ரன்
vs பாகிஸ்தான் - 21 ரன்கள்

இப்படி அடுத்த ஐந்து போட்டிகளில் ஒருமுறை மட்டுமே அரைசதம் கடந்திருந்தார் இவர். சராசரி - 22.4! இதுவொன்றும் மிகமோசமான செயல்பாடு இல்லை. இதனால் தென்னாப்பிரிக்க அணி பாதிக்கப்படவும் இல்லை. ஆனாலும் வேன் டெர் டுசன் போன்ற ஒரு வீரரிடமிருந்து இப்படியொரு செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. வெகு காலமாய் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் டாப் 10 இடங்களுக்குள் இருப்பவர். சராசரியாய் 55+ வைத்திருப்பவர். அப்படிப்பட்ட ஒருவரிடமிருந்து எப்படி இப்படியொரு செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியும். சொல்லப்போனால் அவர்கள் வெற்றி பெறும் விதம் இவரைப் பற்றி யாரும் கவனிக்காமல் பார்த்துக்கொண்டது. ஒருவழியாய் மற்றவர்கள் கவனிப்பதற்கு முன்பாக ஒரு மிகப் பெரிய இன்னிங்ஸ் ஆடி தன் திறமையை நிரூபித்திருக்கிறார் அவர்.

Rassie Van der Dussen


இந்தப் போட்டியில் வேன் டெர் டுசன் களமிறங்கியபோது தென்னாப்பிரிக்க அணியின் ரன்ரேட் சுமார் நான்கரை தான் இருந்தது. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை மிகவும் கவனமாகவே எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அதிலும் வேன் டெர் டுசன் டபுள் கவனமாக இருந்தார். சிங்கிள் எடுப்பதற்கே பந்துகளைத் தேர்ந்தெடுத்துத்தான் ஆடினார். தன் முதல் 30 பந்துகளில் 18 டாட் பால்கள் ஆடினார் அவர். அந்த அளவுக்குக் கவனமாக இருந்தார். வேகப்பந்துவீச்சாளர்களை அவ்வளவாக சீண்டாத அவர், கிளென் ஃபிளிப்ஸ், ரச்சின் ரவீந்திரா போன்ற பார்ட் டைம் ஸ்பின்னர்கள் வந்தபோது பௌண்டரிகள் அடிக்கத் தொடங்கினார். முன்பைப் போல் அல்லாமல் ஸ்டிரைக்கையும் நன்றாக ரொடேட் செய்ய, ரன்ரேட் உயரத் தொடங்கியது. டி காக் உடன் இணைந்து முதல் போட்டியைப் போலவே ஒரு மிகப் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கத் தொடங்கினார். அவருடைய அரைசதம் 61 பந்துகளில் வந்தது. கடைசி 30 பந்துகளில் அவர் எடுத்த ரன்கள் 33.

அரைசதத்துக்குப் பிறகு அதே வேகத்தில் தான் ஆடினார். இரண்டு பேட்ஸ்மேன்களுமே பெரிதாக அவசரம் காட்டாமல் தான் ஆடினார்கள். 10 பந்துக்கு ஒரு பௌண்டரி என்ற விகிதத்தில் தான் பௌண்டரிகள் அடித்துக்கொண்டிருந்தா வேன் டெர் டுசன். ஆனால் ரன் விகிதத்தை நல்லபடியாக வைத்திருக்க அதுவே போதுமானதாக இருந்தது. 35வது ஓவர் கடந்த பிறகு தன்னுடைய வேகத்தை சற்று கூட்டினார் வேன் டெர் டுசன். அடுத்த 5 ஓவர்கள் பௌண்டரி எல்லையில் 4 ஃபீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதால் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். நீஷம் ஓவரில் ஃபோர் அடித்து 101வது பந்தில் தன் சதத்தை பூர்த்தி செய்தார் அவர். அதன்பிறகு அவர் வேகம் பன்மடங்கு அதிகமானது. நீஷம் வீசிய 44வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசிய அவர், சௌத்தி வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். கடைசியில் சௌத்தியின் பந்துவீச்சிலேயே போல்டாகி வெளியேறினார் வேன் டெர் டுசன்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"போட்டியின் தொடக்கத்தில் நியூசிலாந்து பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள். அப்போது ரன்ரேட் சுமார் 4 விகிதம் தான் இருந்தது. நாங்கள் அதை அதிகப்படுத்த கடுமையாக உழைக்கவேண்டியதாக இருந்தது. குவின்டன் டி காக் ஒரு மிகச் சிறந்த இன்னிங்ஸ் ஆடினார். என்னையும் நன்றாக வழிநடத்தினார். இருவரும் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடினோம். பந்து கொஞ்சம் மெலிதான பிறகு பெரிய ஷாட்கள் ஆடத் தொடங்கினோம். இந்த ஆடுகளத்தில் பௌலர்கள் சரியான லென்த்தில் பந்துவீசும்போது அது அவர்களுக்கு ஒத்துழைக்கவே செய்தது. டெஸ்ட் மேட்ச் லென்த்தில் பந்துவீசும்போது பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. நாங்கள் அதை சரியாகக் கடக்க நினைத்தோம். இதைப் பற்றி பௌலர்களிடமும் கூடக் கூறினோம். நான் பேட்டிங் ஆடும்போது என் அணுகுமுறையில் கவனம் செலுத்தவும், நல்ல பந்துகளை மதிக்கவும் டி காக் அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். அதிரடி நோக்கோடு ஒவ்வொரு பந்தையும் அணுகுவது எளிதாக இல்லை. மில்லர் அண்ட் கோ அதை மிகச் சிறப்பாக செய்தது. வெற்றி பெற 300 முதல் 320 வரையிலான ஸ்கோர் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்கள் மிடில் ஆர்டர் இருக்கும் பலத்துக்கு வானமே எல்லை. ஒரு பெரிய ஸ்கோர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு அட்டகாசமான டீம் பெர்ஃபாமன்ஸ். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது"
ரஸி வேன் டெர் டுசன்.