INDvSL | இலங்கையை வென்று அரையிறுதிக்குள் அதிகாரபூர்வமாக நுழையுமா இந்தியா..?

கடந்த போட்டியில் டக் அவுட் ஆன கிங் கோலி அதற்கும் சேர்த்து தன் ஃபேவரிட் அணிக்கு எதிராக இந்தப் போட்டியில் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.
Virat Kohli
Virat Kohli Kunal Patil
போட்டி 33: இந்தியா vs இலங்கை
மைதானம்: வான்கடே, மும்பை
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 2, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

இந்தியா
போட்டிகள்: 6, வெற்றிகள் - 6, தோல்வி - 0, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 12
புள்ளிப் பட்டியலில் இடம்: முதலாவது
சிறந்த பேட்ஸ்மேன்: ரோஹித் ஷர்மா - 398 ரன்கள்
சிறந்த பௌலர்: ஜஸ்ப்ரித் பும்ரா - 14 விக்கெட்டுகள்
இந்தியாவே எதிர்பார்க்காத வகையில் இந்த உலகக் கோப்பையை தொடங்கியிருக்கிறது மென் இன் புளூ. இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலுமே பெரிய தடைகள் இல்லாமல் வெற்றி பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து என முதல் 5 போட்டிகளையும் சேஸ் செய்து வென்றது இந்தியா. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் முதலில் பேட் செய்து வெறும் 229 ரன்களே அடித்திருந்தாலும், சிறப்பாக பந்துவீசி 100 ரன்கள் வித்தியாசத்தில் இன்னொரு பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை
போட்டிகள்: 6, வெற்றிகள் - 2, தோல்விகள் - 4, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4
புள்ளிப் பட்டியலில் இடம்: ஏழாவது
சிறந்த பேட்ஸ்மேன்: சதீரா சமரவிக்ரமா - 331 ரன்கள்
சிறந்த பௌலர்: தில்ஷன் மதுஷன்கா - 13 விக்கெட்டுகள்
தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்த இலங்கை அணி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருந்தது. ஆனால் கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் அடி வாங்கி அரையிறுதி வாய்ப்பையும் மறந்துவிட்டது. இரண்டாவது பேட்டிங் செய்த 3 போட்டிகளில் தான் இலங்கையின் இரண்டு வெற்றிகளும் வந்திருக்கின்றன.

மைதானம் எப்படி இருக்கும்?

வான்கடே மைதானம் எப்படி இருக்கும். எப்போதும் போல் பேட்ஸ்மேன்களின் சொர்க்க பூமியாக இருக்கும். இந்த உலகக் கோப்பையில் இதுவரை அங்கு 2 போட்டிகள் நடந்திருக்கின்றன. அவை இரண்டிலும் முறையே 249 ரன்கள் மற்றும் 149 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா. அந்த இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அந்த அணியின் ஸ்கோர்கள் - 399/7 மற்றும் 382/5. இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் இந்த ஸ்கோர்களை முந்துவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

இந்தப் போட்டிக்கும் ஹர்திக் பாண்டியா இல்லை

மிகச் சிறப்பாக இந்த உலகக் கோப்பையை தொடங்கியிருக்கும் இந்திய அணிக்கு இருக்கும் ஒரே சிக்கல் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் காயம் தான். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது காயமடைந்தவர், அதன்பின் இரு ஆட்டங்களிலும் ஆடவில்லை. இப்போது, அவர் அடுத்த இரு லீக் போட்டிகளிலும் (இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக) ஆடமாட்டார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அவர் இல்லாததால் அணிக்குள் வந்த சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி இருவருமே இந்தியாவின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

அது ஒரு வகையில் பிரச்சனை இல்லை என்றாலும் சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் ஆட்டம் கொஞ்சம் கவலை தருவதாக இருக்கிறது. 4 இன்னிங்ஸ்களில் 26 என்ற சராசரியில் தான் ஆடியிருக்கிறார் கில். 6 இன்னிங்ஸ்களில் ஷ்ரேயாஸ் ஒரு முறை தான் அரைசதம் கடந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் வந்தாலே எதிரணி பௌலர்கள் ஷார்ட் பால்களாகப் போடுகிறார்கள். இவரும் அவுட் ஆகிவிடுகிறார். ஏற்கெனவே அவருக்குப் பதில் இஷன் கிஷனைக் கொண்டுவரவேண்டும் என்ற வாதம் எழத் தொடங்கிவிட்டது. ஆனால் இலங்கைக்கு எதிராக அவருக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை சிராஜ் மட்டும் கொஞ்சம் தடுமாறுகிறார். மற்ற அனைவருமே பட்டையைக் கிளப்புகிறார்கள். அதிலும் குறிப்பாக முகமது ஷமி மிரட்டுகிறார். ஒருவேளை இந்திய அணி பேட்டிங் டெப்துக்காக ஷர்துல் தாக்கூரை கொண்டுவரவேண்டும் என்றால் சிராஜ் இடத்தில் தான் கைவைக்க முடியும். ஆனால் எதிரணி இலங்கை என்பதால் இந்திய அணி அதிக மாற்றங்கள் செய்யாது என்று எதிர்பார்க்கலாம்.

மூன்றே வீரர்களை நம்பிக் களமிறங்கும் இலங்கை

இந்திய அணிக்கு 3 வீரர்களின் செயல்பாடு கொஞ்சம் சுமார் என்றால், இலங்கை அணிக்கு சீராக விளையாடுவதே 3 பேர் தான். பேட்டிங்கில் சமரவிக்ரமா, நிசன்கா இருவரும் டாப் ஆர்டரில் நல்ல பங்களிப்பு கொடுக்கிறார்கள். ஆனால் அதை மிடில் ஆர்டரால் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. குஷல் மெண்டிஸ் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட பின் பேட்டிங்கில் தடுமாறுகிறார். பந்துவீச்சிலோ மதுஷன்கா தவிர யாரும் விக்கெட் எடுப்பதில்லை. இந்தியாவுக்கு எதிராகவும் இலங்கை அணி இவர்கள் மூவரையுமே பெரிதாக நம்பியிருக்கும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

இந்தியா - விராட் கோலி: கடந்த போட்டியில் டக் அவுட் ஆன கிங் கோலி அதற்கும் சேர்த்து தன் ஃபேவரிட் அணிக்கு எதிராக இந்தப் போட்டியில் கலக்குவார்.

இலங்கை - சதீரா சமரவிக்ரமா: பும்ரா, ஷமி ஆகியோரையெல்லாம் சமாளித்து இலங்கை அணி ஓரளவு சுமாரான ஸ்கோரை எடுக்கவேண்டும் என்றால், இவர் மிகப் பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும். இலங்கை இன்னிங்ஸ் முழுவதும் அவர் ஆடவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com