MS Dhoni
MS Dhoni ICC
கிரிக்கெட்

”தோனியால்தான் ஜார்கண்ட் அணி இருப்பதே வெளியில் தெரிந்தது; அவர் எங்களின் கடவுள்” - முன்னாள் MI வீரர்

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிரோபி உலகக்கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தன்வசம் வைத்திருக்கும் ஒரேயொரு உலக கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது தலைமையில்தான் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து தலைசிறந்த அணியாக தலைநிமிர்ந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு வீரராக போட்டியை முடித்துவைக்கும் சிறந்த பினிசராக இன்றளவும் போற்றப்படும் ஒரு வீரராக தோனி இருந்துவருகிறார்.

தோனி இந்திய அணிக்காக அறிமுகமாகி 2007 டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகுதான், அவரை பற்றியும் அவருடைய அணியான ஜார்கண்ட் அணியை பற்றியும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக அறிந்துகொண்டனர். அதுவரை ஜார்கண்ட் என்ற ஒரு அணி இருக்கிறதா என கேட்கும் அளவுக்குதான் அந்தணியின் வெளிச்சம் இருந்தது. ஒரு இருண்ட வாழ்க்கை முறைக்குள் இருந்து முட்டிமோதி வெளியில் வந்த மகேந்திர சிங் தோனி, ஜார்கண்ட் அணியையும் வெளிச்சத்திற்கு அழைத்துவந்துள்ளார். அவர் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், இன்னும் ஜார்கண்ட் அணியுடன் நல்ல பிணைப்பை தொடர்ந்துவருகிறார்.

MS Dhoni

இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் சவுரப் திவாரி, ”தோனியை ஜார்கண்ட் கிரிக்கெட்டின் கடவுள்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜார்கண்ட் கிரிக்கெட்டின் கடவுள் எம்.எஸ் தோனி!

மகேந்திர சிங் தோனி குறித்து பேசியிருக்கும் சவுரப் திவாரி, “எம்எஸ் தோனி எங்கள் ஜார்கண்ட் கிரிக்கெட்டின் கடவுள். அவர் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியதிலிருந்துதான், மக்கள் எங்களை ஒரு அணியாக அறியத் தொடங்கினர்.ஜார்கண்ட் எங்குள்ளது என்பதையே அவர்கள் அப்போதுதான் அறிந்து கொண்டனர். எங்கள் மண்ணின் கிரிக்கெட்டுக்கு எம்.எஸ். தோனி நம்பிக்கையைத் தந்துள்ளார், அவர் எங்கள் நகரத்தை சுற்றி அல்லது ஊரில் இருக்கும் போதெல்லாம், எங்களுடன் பயிற்சி அமர்வுகளில் கலந்து கொள்ள வந்துவிடுவார். சில சமயங்களில், எங்களுடன் வார்ம்-அப் விளையாட்டுகளிலும் பங்கேற்பார். அவருடைய ஆதரவுதான் எங்களுக்கு எல்லாமே" என்று சவுரப் திவாரி ஸ்போர்ட்ஸ் நவ்விடம் பேசியுள்ளார்.

ms dhoni

தோனியின் கேப்டன்சி குறித்து பேசியிருக்கும் அவர், “தோனி பையா அணியை வழிநடத்தும் போது நிறைய சுதந்திரம் தருகிறார். உங்களால் போட்டியில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அவர் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களுக்கு ஆதரவாக நிற்பார்” என்று புகழ்ந்துள்ளார்.

saurabh tiwary

மேலும் தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பேசியிருக்கும் திவாரி, “அதேபோல தோனி கீப்பராக விக்கெட்டுக்குப் பின்னால் நிற்கும்போது, ​​அவர் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய உதவுவார். விக்கெட் எவ்வாறு செயல்படுகிறது, உங்களுடைய பந்துக்கு எப்படி பதிலளிக்கிறது என்பதை அவர் பந்துவீச்சாளர்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்பார். மேலும் துல்லியமான நேரத்தில் களத்தில் எப்படி செயல்படவேண்டும் என்று பவுலர்களுக்கு உதவுவார்” என்று பாராட்டி பேசியுள்ளார்.