முஷீர் கான்
முஷீர் கான் cricinfo
கிரிக்கெட்

ரஞ்சி காலிறுதி: 18 வயதில் இரட்டை சதம்! வரலாறு படைத்த சர்பராஸ் தம்பி முஷீர்கான்! தப்பித்த மும்பை!

Rishan Vengai

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது காலிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட ”தமிழ்நாடு, மும்பை, விதர்பா, கர்நாடகா, பரோடா, சௌராஸ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா” முதலிய 8 அணிகள் காலிறுதிப்போட்டியில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் மும்பை மற்றும் பரோடா அணிகள் மோதிவரும் காலிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கலந்துகொண்டு விளையாடிய 18 வயது முஷீர்கான் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.

தனியொரு ஆளாக மும்பையை காப்பாற்றிய முஷீர்!

சர்பராஸ் கானின் தம்பியான முஷீர் கான் யு19 உலகக்கோப்பையில் இரண்டு சதங்களை விளாசி சிறப்பான தொடரை கொண்டிருந்தார். இறுதிப்போட்டிவரை சென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை நழுவவிட்டது. ஒரு இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு ரஞ்சிக்கோப்பையில் பங்கேற்றிருக்கும் முஷீர் கான், காலிறுதிப்போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.

முஷீர் கான் - சர்ஃபராஸ் கான்

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, பரோடாவின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 142 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் அவுட்டாகி வெளியேற, 7வது நிலை வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஹர்திக் தாமோர் உடன் ஜோடி சேர்ந்த முஷீர் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதமடித்து ஒரு நிலையான ஆட்டத்தை ஆடிய முஷீர்கான், தன்னுடைய பிரைம் பார்மை பயன்படுத்தி அதனை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார்.

357 பந்துகளில் 203 ரன்களை குவித்து முஷீர் கான் நாட் அவுட்டாக நீடிக்க, மறுமுனையில் இருந்த அனைவரும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். முடிவில் முஷீர் கானின் தனியோரு ஆட்டத்தின் பலனாய் 380 ரன்களை குவித்து ஆல்அவுட்டானது மும்பை அணி. மும்பையை தொடர்ந்து விளையாடிவரும் பரோடா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்களுடன் விளையாடிவருகிறது.

18 வயதில் வரலாறு படைத்த முஷீர்கான்!

18 வயதில் ரஞ்சிக்கோப்பையில் இரட்டை சதமடித்திருக்கும் முஷீர் கான், மும்பை கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் ரஞ்சிக்கோப்பை இரட்டை சதமடித்தவரான வாசிம் ஜாஃபரின் சாதனையை சமன்செய்துள்ளார். 1996-1997 ரஞ்சிக்கோப்பையில் 18 வயதில் 314* ரன்களை அடித்திருந்தார் வாசிம் ஜாஃபர். அதற்கு பிறகு இரண்டாவது மும்பை வீரராக இந்த சாதனையை முஷீர் கான் படைத்துள்ளார்.

மேலும் ரஞ்சிக்கோப்பையில் இளம் வயதில் இரட்டை சதமடித்தவர்கள் பட்டியலில், “சிங் சோதி (17 வயது 17 நாட்கள்), அம்பத்தி ராயுடு (17 வயது 55 நாட்கள்), பினல் ஷா (18 வயது 62 நாட்கள்), வாசிம் ஜாஃபர் (18 வயது 265 நாட்கள்), குண்டப்பா விஸ்வனாத் (18 வயது 273 நாட்கள்), அபினவ் முகுந்த் (18 வயது 303 நாட்கள்) , விஜய் ஷால் (18 வயது 340 நாட்கள்) மற்றும் சஞ்சு சாம்சன் (18 வயது 352 நாட்கள்)” முதலிய வீரர்களுக்கு பிறகு 9வது வீரராக இளம் வயதில் இரட்டை சதமடித்து முஷீர் கான் (18 வயது 362 நாட்கள்) அசத்தியுள்ளார்.