சாம் கரன் - சங்ககரா web
கிரிக்கெட்

காயம் என கூறிவிட்டு பிளாஸ்ட் தொடரில் விளையாடிய சாம் கரன்.. கேள்வி எழுப்பும் சங்ககரா!

ஜடேஜா உடன் இணைந்து வர்த்தகம் செய்யப்பட்ட சாம் கரன், காயம் காரணமாக ராஜஸ்தான் அணியில் விளையாட முடியவில்லை என கூறப்பட்டது. ஆனால் டி20 பிளாஸ்ட் தொடரில் கடந்த 3-4 போட்டிகளில் விளையாடியிருப்பது சங்ககராவை சங்கடப்படுத்தியுள்ளது.

Rishan Vengai

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சாம் கரன், இங்கிலாந்தில் நடைபெறும் T20 பிளாஸ்ட் லீக்கில் தொடர்ந்து 3-4 போட்டிகளில் விளையாடி நல்ல ரன்கள் குவிப்பது RR அணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியடைந்த பின்னர், சாம் கரன் விளையாட முடிந்திருந்தால் எங்கள் அணிக்கே உதவியிருப்பார் என சங்ககரா வருத்தம் தெரிவித்ததோடு, வீரரின் முடிவை நெறிமுறை ரீதியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபயர் 2 போட்டியில் 96 ரன்கள் அடித்து நல்ல டோட்டலுக்கு சூர்யவன்ஷி அடித்தளமிட்டாலும், கடைசியில் வந்த பேட்ஸ்மேன்களால் பெரிய அளவில் ரன்களை கடத்தமுடியவில்லை. அதிலும் சாம்கரனுக்கு பதிலாக வாங்கப்பட்ட தசுன் ஷனகா வெறும் 9 பந்தில் 3 ரன்கள் அடித்தது 240 வரை செல்லக்கூடிய டோட்டலை 214 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி எளிதாக இலக்கைஎட்டி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

சாம் கரன்

இந்தசூழலில் தான் போட்டிக்கு பிறகு பேசியிருக்கும் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககரா, காயத்தால் விளையாட முடியாது என்று ஐபிஎல்லில் இருந்து விலகிவிட்டு தற்போது டி20 பிளாஸ்ட் லீக்கில் விளையாடிய சாம் கரனை கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 3-4 போட்டிகளில் விளையாடியதை பார்த்தேன், அப்படி வரமுடியும் என்று தெரிந்திருந்தால் எங்களுடைய அணியில் நாங்கள் வரவேற்றிருப்போம், எங்களுடைய அணிக்கும் அது சிறந்ததாக இருந்திருக்கும். ஆனால் எங்களிடம் ஐபிஎல் தொடர் முடியும் வரை வரமுடியாது என்று கூறிவிட்டு, தற்போது வேறொரு தொடரில் விளையாடுவது வருத்தத்தை தருவதாக பேசியுள்ளார்.

டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக 3-4 போட்டிகளில் விளையாடிருக்கும் சாம் கரன் தன்னுடைய பேட்டிங்கால் நல்ல ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.