Salman Butt
Salman Butt Twitter
கிரிக்கெட்

“ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள இந்திய அணியில் இந்த மாற்றத்தை செய்யுங்கள்”- பாக். வீரர் அட்வைஸ்!

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்கான தயாரிப்பில் மும்முரமாக இருந்துவருகின்றனர். முதல் என்கவுண்டரில் அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலிய அணியை சென்னையில் எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணி, எந்த 15 வீரர்களை உலகக்கோப்பைக்கு எடுத்துச்செல்வது என்பதை முடிவு செய்ய சோதனை முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் என சமீப காலத்தில் இந்திய அணியில் நிலையாக விளையாடிய 3 மிடில் ஆர்டர் வீரர்களும் தற்போது அணியில் இல்லாதது பெரிய பாதகமாகவே தெரிகிறது. ஒருபுறம் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை, மறுபுறம் பும்ரா இல்லாத பலவீனமான பந்துவீச்சாளர்கள் யூனிட் என இரண்டு பக்கத்திலும் இந்திய அணியின் நிலை கவலைக்கிடமாகவே இருந்துவருகிறது.

Ind vs WI

இந்நிலையில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஜெயதேவ் உனாத்கட், முகேஷ் குமார் என பல வீரர்களை சுழற்சிமுறையில் இந்திய அணி பயன்படுத்திவருகிறது. ஆனால் கிடைத்த வாய்ப்புகளில் இந்த வீரர்கள் எல்லாம் நினைத்த ரிசல்ட்டை தந்தார்களா என்றால் கேள்விக்குறி தான்.

இதற்கிடையில் தற்போது இந்திய அணியின் பேட்டிங் பலவீனம் குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட், “ஷிகர்தவான் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரையும் இந்திய அணிக்குள் திரும்ப கொண்டுவர வேண்டும்” என கூறியுள்ளார்.

முன்பு இருந்த மாதிரி வலுவான வீரர்கள் இல்லை!

சமீபத்திய இந்திய அணி குறித்து தன்னுடைய யூட்யூப் பக்கத்தில் பேசியிருக்கும் சல்மான் பட், “சமீப காலமாக இந்திய அணி வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக மோசமாக விளையாடிவருகின்றனர். கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஸ்பின்னர்களுக்கு எதிராக வலுவான ஒரு அணி என்ற பாரம்பரியத்தை வைத்திருந்தது. ஆனால் தற்போது இருக்கும் வீரர்கள், ஸ்பின்னர்களுக்கு எதிராக அத்தகைய திடமான எதிர்ப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதை சரிசெய்ய வேண்டிய இடத்தில் இந்தியா இருக்கிறது.

Rahane

இரண்டாவதாக ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் அவர்கள் பல மாற்றங்களை செய்கின்றனர். உலகக் கோப்பை நெருங்கிவரும் நிலையில், உங்களுடைய அணிக்கான 15 வீரர்கள் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். அவரவர்களுக்கான ரோல் தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் இந்திய அணி அவர்களுக்கான வீரர்களையே தேடி வருகிறது” என்று கூறியுள்ளார்.

அழுத்தமான நேரத்தில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் அவர்களை எடுங்கள்!

மேலும் இந்திய அணி சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம் என கூறிய பட், “இஷான் கிஷன், சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் போன்ற வீரர்கள் யாரும் புதியவர்கள் இல்லை. அவர்கள் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதங்களையும், டி20 போட்டிகளில் சதங்களையும் அடித்துள்ளனர். அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமானது. ஆனாலும் இளம் வீரர்கள் அழுத்தமான நேரத்தில் தடுமாறுகின்றனர். அதை களைய வேண்டும் என்றால் இந்திய அணி அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷிகர் தவான் போன்ற வீரர்களை அணிக்குள் எடுத்துவர வேண்டும்.

Shikhar Dhawan

அஜிங்க்யா ரஹானே கடந்த ஐபிஎல்லில் ஆடியவிதமும், டெஸ்ட் அணிக்குள் கம்பேக் கொடுத்தவிதமும் அவரை உலகக்கோப்பைக்கான அணியில் நல்ல தேர்வாகவே பார்க்க வைக்கிறது. அதேபோல ஷிகர் தவானை போன்ற ஒரு சிறந்த ஓப்பனர் தற்போதைய இந்திய அணியில் யாரும் இல்லை. தவான் அணிக்குள் வந்தால், அவரும் சுப்மன் கில்லும் ஓப்பனிங் இறங்கி விளையாடலாம்.

ரோகித் சர்மா, கீழ் வரிசையில் இறங்கி அணிக்கான பேலன்சை தரலாம். 5 அல்லது 6-வது இடத்தில் இந்திய அணிக்கு ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் தேவை. அந்த இடத்தில் விளையாடும் இளம் வீரர்களால் அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாட முடியாமல் போகிறது. உலக்கோப்பையில் நீங்கள் பல அழுத்தமான ஆட்டங்களை சந்திக்க நேரும். அப்போது அணியில் ஒரு அனுபவமுள்ள வீரர் இருக்க வேண்டியது அவசியம்” என பேசியுள்ளார்.