“நேராக உலகக்கோப்பை பைனலில் விளையாட முடியாது”-பும்ராவின் நிலை குறித்து கேள்விகளால் விளாசிய கபில்தேவ்!

ஒருவேளை பும்ராவால் உலகக்கோப்பை அரையிறுதியிலும், இறுதிபோட்டியிலும் விளையாட முடியவில்லை என்றால் அவர் மீது அதிக நேரத்தை வீணடிக்கிறோம் என்று கபில்தேவ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
Bumrah - Kapil Dev
Bumrah - Kapil DevTwitter

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 66 நாட்களே மீதமிருக்கும் நிலையில், இந்திய அணி அதற்கான தயாரிப்பில் மந்தமாக செயல்பட்டு கொண்டிருப்பது போலவே தெரிகிறது. அனைவரது கவனமும் இந்திய அணியின் பேட்டிங்கின் மீதும், மிடில் ஆர்டர் மீதும் இருக்கிறது. ஆனால், இந்திய அணியின் பவுலிங் காம்பினேசன் என்ன? என்ற பெரிய ஓட்டையை பற்றி யாரும் பெரிதாக பேசாமல் இருந்து வருகின்றனர். பும்ராவின் நிலை என்ன? அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பாரா? இந்தியாவின் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் யார்? யார்? என்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாமலே இருந்து வருகிறது.

Bumrah
Bumrah

இந்திய அணியின் பெஞ்ச்சில் இரண்டு அணிகளை வைத்து விளையாடும் அளவு வீரர்கள் இருந்தாலும், எந்த 11 வீரர்கள் இந்தியாவின் உலகக்கோப்பை அணியில் விளையாடுவார்கள் என்ற முடிவு மட்டும் எட்டப்பாடாமலே இருக்கிறது. அவரவர்களுக்கான இடத்தை தேர்ந்தெடுத்து, இதில் தான் நீங்கள் விளையாட போகிறீர்கள், அதற்காக உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள் என்ற நிலையான நிலைப்பாடு இல்லாமல் இருப்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

கடந்த காலங்களில் இந்திய அணியில் இருந்த எந்த குறைகளால் கோப்பைகளை வெல்லமுடியாமல் போனதோ, அந்த குறைகள் அனைத்தும் இன்னும் நிவர்த்தி செய்யப்படாமலே இருந்துவருகிறது. இந்நிலையில், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா என்ன ஆனார்? அவரின் நிலை என்ன? என்று இந்திய அணியின் முன்னாள் உலகக்கோப்பை கேப்டன் கபில்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பண்ட் இல்லாமல் டெஸ்ட்டில் கோட்டை விட்டோம்.. இப்போது பும்ரா நிலை என்ன?

தி வீக் உடனான நேர்காணலில் பேசியிருக்கும் கபில்தேவ், “பும்ராவுக்கு என்ன ஆனது? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் காயத்திலிருந்து வெளிவருவதற்கான முயற்சியில் இறங்கினார். ஆனால், தற்போது அவருடைய நிலை என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது. ஒருவேளை அவர் உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என்றால் நாம் அவருக்காக அதிகமான நேரத்தை வீணடித்துள்ளோம். ரிஷப் பண்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். பண்ட் இருந்திருந்தால், நம்முடைய டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல பும்ராவையும் நாம் இழந்துவிடக்கூடாது” என்று தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கபில் தேவ்
கபில் தேவ்

மேலும் வீரர்களின் காயம் குறித்து பேசிய அவர், “இப்போது இருக்கும் வீரர்கள் ஒருவருடத்தில் 10 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இப்படி விளையாடுவதால் காயம் ஏற்படாதா என்ற சந்தேகத்தை அவர்களிடம் எழுப்புங்கள். வீரர்கள் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். ஐபிஎல் விளையாடுவது பெரிய விசயம் தான், அதே நேரம் அது உங்களின் உடலை பாழாக்கவும் செய்யும். ஒருவேளை ஐபிஎல் போட்டியில் உங்களுக்கு காயம் ஏற்பட்டால், சிறிய காயத்தோடு கூட உங்களால் விளையாட முடியும். ஆனால் அதையே இந்திய அணியில் செய்துவிட முடியாது. அதற்கு தயாராக உங்களுக்கு நிச்சயம் பிரேக் தேவை. இந்த விசயத்தை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் வாரியத்திடம் ஏதோ தவறு இருக்கிறது!

வீரர்களுக்கான நிலைப்பாட்டில் கிரிக்கெட் வாரியம் தெளிவாக இல்லை என குற்றஞ்சாட்டிய கபில் தேவ், “சிறிய காயத்தோடு கூட ஐபிஎல்லின் முக்கியமான போட்டியில் விளையாடுவீர்கள், ஆனால் அப்படியே நேராக வந்து உலகக்கோப்பையில் விளையாட முடியாது. வீரர்கள் எவ்வளவு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை கிரிக்கெட் வாரியம் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அடிப்படை. இன்று உங்களிடம் வளமும் பணமும் உள்ளது. ஆனால் மூன்று ஆண்டு அல்லது ஐந்தாண்டுகளுக்கான காலண்டர்கள் இல்லை. கிரிக்கெட் வாரியத்திடம் ஏதோ தவறு இருக்கிறது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com