சஜீவன் சஜனா
சஜீவன் சஜனா புதியதலைமுறை
கிரிக்கெட்

WPLT20 | தோனி பாணியில் சிக்ஸர் அடித்து பினிஷ் செய்த சிங்கப்பெண்! கனா படத்தில் நடித்தவரா? அடேங்கப்பா!

யுவபுருஷ்

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் பிரீமியர் லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. தொடர்ந்து, 172 ரன்களை இலக்காக வைத்துக்கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19 ஓவர் முடிவின்போது 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை சேர்த்தது. கடைசி 6 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கேப்டன் ஹர்பம் ப்ரீத் கவுர் ஆட்டமிழந்தார். இதனால், வெற்றிவாய்ப்பு தவறிவிடுமோ என்று ரசிகர்கள் குழம்பினர். கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்து சேர்ந்தது போட்டி நிலவரம்.

அந்த நேரத்தில் களத்தில் இறங்கிய அறிமுக வீராங்கனை சஜீவன் சஜனா, கடைசி பந்தில் இறங்கி அடித்து அதனை சிக்ஸராக மாற்றினார். 4 ரன்கள் எடுத்தாலே சூப்பர் ஓவர் போகும். அதைவைத்து வெற்றியை பிடித்துவிடலாமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ‘நாலு என்ன, இதோ ஆறையே தரேன்’ என்று தல தோனியைப் போன்று கடைசி பந்து இறங்கி சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார் சஜீவன் சஜனா. வெற்றிக்கனியை மும்பைக்கு பரிசளித்த சஜனா, கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர். ஆஃப் ஸ்பின்னரான இவரை மும்பை அணி ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. இவர் பேட்டிங்கிலும் பங்களிப்பு செலுத்துவார் என்பதால் ஆல் ரவுண்டராக பார்க்கப்படுகிறார்.

குறிப்பாக, அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் நடித்துள்ளார் சஜனா. ஐஸ்வர்யா ராஜேஸின் நண்பர்களில் ஒருவராக கிரிக்கெட் வீராங்கனையாக நடித்த இவர், சிவகார்த்திகேயனுடனும் ஒரு சில காட்சிகளில் தோன்றியிருப்பார். இந்த நிலையில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கனியை பறித்துக்கொடுத்த சஜனா குறித்த தகவல்களை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சிங்கப்பெண்ணே பாணியில் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வாழ்த்துகள் சஜீவன் சஜனா.

கிரிக்கெட்டில் ஜொலிக்கும் ஆட்டோ டிரைவரின் மகள்!

மிகவும் பின் தங்கிய குடும்ப பின்னணியில் இருந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் முதலில் கேரள அணிக்காக U23 லெவல் போட்டிகளில் விளையாடி அணியை வழிநடத்தினார். இவர் தலைமையில் 2019 ஆம் ஆண்டு கேரள அணி டி20 சூப்பர் லீக் பட்டத்தை வென்றது. அதேபோல், சீனியர் பெண்களுக்கான 2023 டி20 டிராபியிலும் கேரள அணிக்காக சிறப்பான பங்களிப்பு செலுத்தினார். கேரள அணி அரையிறுதி வரை சென்றது. இதில் 7 போட்டிகளில் 134 ரன்கள் எடுத்தார் சஜனா. மூன்று முறை நாட் அவுட் ஆனார். பந்துவீச்சிலும் 6 விக்கெட் சாய்த்தார்.