சச்சின், கோலி
சச்சின், கோலி ட்விட்டர்
கிரிக்கெட்

”அன்று என் கால்களைத் தொட்டீர்கள்.. இன்று என் இதயத்தை” - கோலியின் சாதனை குறித்து சச்சின் நெகிழ்ச்சி!

Prakash J

சச்சினின் சாதனைகளைத் தகர்த்த விராட் கோலி

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று, (நவ.15) முதலாவது அரையிறுதிப் போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ரோகித் 47 ரன்கள், சுப்மன் கில் 80* ரன்கள், விராட் கோலி 117 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள், கே.எல்.ராகுல் 39* ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் செளதி 10 ஓவர்கள் வீசி 100 ரன்களை வாரி வழங்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்தார். சச்சின் கடந்த 2003 உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 673 ரன்கள் குவித்திருந்தார். அதை, விராட் கோலி நடப்புத் தொடரில் 711 ரன்கள் எடுத்து தகர்த்தார். அதுபோல் சச்சின் அதிகபட்சமாக 49 ஒருநாள் சதங்களை அடித்திருந்தார். அதையும் நடப்புத் தொடரில் சமன் செய்த விராட் கோலி, இன்று 50வது சதம் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்தார். அதுவும், வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு முன்னிலையிலேயே விராட் கோலி சாதனை படைத்தது ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து விராட் கோலிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: Unstoppable... ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா! சச்சினின் 20 ஆண்டு ரெக்கர்டை முறியடித்த விராட் கோலி!

விராட் கோலியின் நினைவலையைப் பகிர்ந்த சச்சின்!

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியுடனான நினைவலை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”டிரஸ்ஸிங் ரூமில் நான், உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, பிற வீரர்கள் என் கால்களில் விழும்படி அவரைக் (கோலியை) கிண்டலடித்தனர். அதைப் பார்த்து அன்றைய தினம் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன், ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட வேறு மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியாது. அதுவும் ஒரு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில்... மிகப் பெரிய அரங்கில்... எனது சொந்த மைதானத்தில் செய்தது என்பது, என் மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி சேர்க்கிறது!” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்தச் சாதனைகளை இந்திய வீரர்களான ரோகித்தோ அல்லது விராட் கோலியோதான் முறியடிப்பார்கள் என சச்சின் டெண்டுல்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2019 தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா! WC அரையிறுதியில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்து சாதனை!

”இது, ஒரு கனவுபோல் உள்ளது” - விராட் கோலி

சாதனை தகர்ப்பு குறித்து விராட் கோலி, ”சச்சின் டெண்டுல்கர் என்கிற மாபெரும் ஜாம்பவான் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது, ஒரு கனவுபோல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். முன்னதாக சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதத்தின் சாதனையைச் சமன் செய்திருந்த விராட் கோலி, “எனது ஹீரோ சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். என் பயணம் எங்கிருந்து தொடங்கியது என்று எனக்கு தெரியும். அவரை சிறுவயதில் டிவியில் பார்த்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அவர் பேட்டிங்கில் தலைசிறந்தவர். என்னால் அவரைப் போல எப்போதும் சிறந்தவராக இருக்க முடியாது. அவர்தான் எப்போதும் என் ஹீரோ” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாதனையை விரைவில் முறியடிக்க வாழ்த்துகள் சொன்ன சச்சின்!

அதற்குமுன்பு, தன்னுடைய உலக சாதனையை சமன்செய்த கோலிக்கு சச்சின் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அத்துடன் கோலி குறித்து பேசிய சச்சின், “சிறப்பாக விளையாடினீர்கள் விராட். 49இல் இருந்து 50 ஆக (வயது) மாற எனக்கு இந்தவருடம் 365 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நீங்கள் அடுத்த சில நாட்களில் 50ஆவது சதத்தை விளாசி எனது ரெக்கார்டை முறியடிப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருந்தார். அவருடைய வாழ்த்துப்படி, இன்று சாதனை படைத்துள்ளார், விராட் கோலி.