ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளைப் படைத்தார்.
2026 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. அதன்படி, முதலாவது பிளேஆப் போட்டியில் குஜராத்தைச் சுருட்டி, பெங்களூரு நேரிடையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும் ஹைதராபாத் அணியும் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
இதில், ஹைதராபாத்தை விரட்டி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2ஆவது குவாலிஃபயருக்கு தகுதிபெற்றது. குறிப்பாக, இந்தப் போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி, 29 பந்துகளில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில் 12 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடக்கம். இதன்மூலம், இந்தப் போட்டியில் அவர் சில சாதனைகளையும் படைத்தார்.
பிளே-ஆப் போட்டியில் அதிவேக அரைசதம் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை சென்னை வீரர் ரெய்னாவுடன் பகிர்ந்துகொண்டார் வைபவ். இருவரும் தலா 16 பந்தில் அரைசதம் எட்டினர்.
இந்தப் போட்டியில், 12 சிக்சர் அடித்த ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் லீக் அரங்கில் ஒரு சீசனில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றினார். இம்முறை அவர் 15 போட்டிகளில், 65 சிக்சர் அடித்துள்ளார். இதற்குமுன், 2012இல் பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 59 சிக்சர்கள் விளாசியிருந்தார்.
ஒரு இன்னிங்சில் அதிக முறை, அதாவது 10+ சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை கெய்லுடன் பகிர்ந்துகொண்டார் வைபவ். இருவரும் தலா 4 முறை 10க்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்துள்ளனர்.
பிளே-ஆப் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் (12) விளாசிய வீரர்கள் வரிசையில் வைபவ் முதலிடம் பிடித்துள்ளார். இதற்குமுன், குஜராத் அணியின் சுப்மன் கில் 10 சிக்சர் அடித்திருந்தார்.
ஒரு சீசனில் பவர்-பிளே ஓவரில் (1-6) அதிக ரன் குவித்த வீரரானார் வைபவ். இம்முறை, 490 ரன் குவித்துள்ளார். இதற்குமுன், 2016இல் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் 467 ரன் எடுத்திருந்தார்.
ஒரு சீசனில் அதிக ரன் குவித்த 'அன்கேப்டு பேட்டர்' ஆனார் வைபவ். இம்முறை 15 போட்டிகளில், 680 ரன் விளாசினார். இதற்கு முன், 2023ல் ராஜஸ்தானின் ஜெய்ஸ்வால் 625 ரன் எடுத்திருந்தார்.