shami, rohit pt web
கிரிக்கெட்

ஷமி இந்திய அணியுடன் இணைவதில் மேலும் சிக்கல்..? உண்மையை உடைத்த ரோகித்!

ஷமியின் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அவர் அணியில் இணைவதற்கும் விளையாடுவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

கடந்தாண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய ஷமி, காயம் காரணமாக நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்தார். தற்போது சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக ஷமி விளையாடி வருகிறார். இதில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

முகமது ஷமி

இதனிடையேதான், ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியுடன் ஷமி இணையப்போகிறார் என்ற செய்திகள் வந்தன. உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் இருந்து சான்றிதழைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஷமி அணியில் இணைவது மேலும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷமியின் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அவர் அணியில் இணைவதற்கும் விளையாடுவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரோகித் சர்மா, “நாங்கள் அவரைக் கண்காணித்து வருகிறோம். ஏனெனில், சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடும்போது அவருக்கு முழங்காலில் சிறிது வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்கும், விளையாடுவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரோகித் சர்மா, ஷமி

வலியுடன் அவரை இங்கு கொண்டு வந்து விளையாட வைக்கும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. அதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். இங்கு வந்து அணிக்காக பணியைச் செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை. சில வல்லுநர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். அவர்களது முடிவை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அவரை அழைப்போம். அவர் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். அவருக்கான கதவு திறந்தே உள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற நிலையில், பகலிரவு போட்டியாக நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில், அடுத்த டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 ஆம் தேதி பிரிஸ்பேனில் நடக்கிறது.