rohit sharma
rohit sharma BCCI
கிரிக்கெட்

“எல்லாவற்றையும் விட ODI உலகக்கோப்பை தான் எனக்கு முக்கியம்!” - மீண்டும் வருத்தங்களை பகிர்ந்த ரோகித்!

Rishan Vengai

உலகக்கோப்பையை வெல்ல வேண்டும், அதிலும் சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு ஒவ்வொரு கிரிக்கெட் அணி கேப்டனுக்கும் அதிகமாகவே இருக்கும். அப்படி மில்லியன் மக்களின் கனவுக்காக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் உலகக்கோப்பையை இறுதிப்போட்டிக்கு சென்று நழுவவிட்டது.

லீக் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வியில்லை, டாப் ஆர்டர்கள் 4 பேரும் சதமடித்திருந்தனர் என இறுதிப்போட்டிக்கு முன்புவரை எல்லாம் கைக்கூடியிருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் முக்கியமான நேரத்தில் ரோகித் மற்றும் கோலி இருவரும் அவுட்டானது, மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பல், முகமது ஷமிக்கு காயம் என இந்திய அணிக்கு எதுவுமே கைக்கூடி வரவில்லை. எப்படியும் கோப்பையை வென்றுவிடுவோம் என்ற கனவோடு இருந்த ரோகித் சர்மாவின் கோட்டை தவிடுபொடியானது.

இறுதிப்போட்டியின் தோல்விக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசுவதற்கு கூட விருப்பம் தெரிவிக்காத ரோகித், டி20 போட்டிகளில் இருந்து கிட்டத்தட்ட விலகும் முடிவுக்கே சென்றிருந்தார். ஆனால் இந்திய அணிக்காக கோப்பையை வெல்லவேண்டும் என்ற அவருடைய கனவு, மீண்டும் அவரை இந்திய கேப்டனாக்கியிருக்கிறது. தற்போது எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்காக தயாராகும் வகையில் இந்திய அணியை தயார்படுத்திவருகிறார். இந்நிலையிலும் ஒருநாள் உலகக்கோப்பையின் தோல்வியை நினைவுகூர்ந்துள்ளார் ரோகித் சர்மா.

எல்லாவற்றையும் விட ODI உலகக்கோப்பை தான் எனக்கு முக்கியம்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கு பிறகு இண்டர்வியூ ஒன்றில் பேசியிருக்கும் ரோகித் சர்மாவிடம், ஒருநாள் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த இலக்கிற்கு தயாராகிவிட்டீர்களா என்று கேட்கப்பட்டது.

Rohit Sharma

அப்போது பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, "பாருங்கள், நான் இப்போது அதைப் பற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை. ஆனால் எனக்கு மற்ற எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பரிசு என்றால், அது 50ஓவர் உலகக்கோப்பை தான். நாங்கள் அதை பார்த்து தான் வளர்ந்தோம். இந்தியாவிற்காக அதை வெல்லவேண்டும் என்பது என்னுடைய கனவு. அதுவும் அந்த உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கும்போது அதுவொரு பெரிய விஷயமாக எங்களுக்கு இருந்தது. நாங்கள் எப்படியாவது வெல்லவேண்டும் என ஒன்றாக முயற்சித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதைச் செய்ய முடியவில்லை. அந்த தோல்விக்கு மொத்த அணி உட்பட ரசிகர்களும் வருத்தம் அடைந்தனர். மக்களும் தோல்வியின் மீது அதிக கோபத்தில் இருந்தனர்” என்று ஏமாற்றத்துடன் பேசினார்.

Rohit Sharma

மேலும், “ 50 ஓவர் உலகக்கோப்பை முக்கியம் என்பதால், டி20 மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனக்கு முக்கியமில்லை என்று ஆகிவிடாது. ஒரு வாய்ப்பை தவறவிட்டாலும் தற்போது எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்வரும் டி20 உலக கோப்பையை வெல்ல முயற்சிப்போம்” என்று ரோகித் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு தேவையான டி20 அணியை உறுதிசெய்யவில்லை என தெரிவித்திருக்கும் ரோகித் சர்மா, 10 வீரர்களுக்கான இடத்தை உறுதிசெய்துள்ளோம், மற்ற இடங்களுக்கு மைதானத்தின் ஆடுகளம் மற்றும் போட்டியின் சூழல் பொறுத்து களமிறக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார்.