ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டு தரப்பிலும் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இரண்டு நாட்கள் நடைபெறும் பிங்க் பால் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் பிரதமர் 11 அணியை எதிர்த்து விளையாடுகிறது.
கான்பெராவில் நடைபெறும் பயிற்சி போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிராஜ், ஹர்சித் ரானா, ஆகாஷ் தீப், வாசிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, ரவிந்திர ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா முதலிய அனைத்து பந்துவீச்சாளர்களையும் பவுலிங் போடுவதற்கு களமிறக்கினார்.
சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலியாவை 240 ரன்களுக்கு ஆல்அவுட்டாக்கினர். சிறப்பாக வீசிய ஹர்சித் ரானா 4 விக்கெட்டுகள், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும், சிராஜ், பிரசித், வாசிங்டன், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் 11 அணியில் பெரிதாக எந்தவீரரும் சோபிக்காத நிலையில், தொடக்க வீரராக களமிறங்கிய 19 வயதேயான சாம் கான்ஸ்டஸ் 97 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து அசத்தியது. ஜெய்ஸ்வால் 45 ரன்னிலும், கேஎல் ராகுல் 27 ரன்னில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையிலும் வெளியேறினர்.
அதற்குபிறகு வந்த ரோகித் சர்மா 11 பந்துகள் மட்டுமே விளையாடி 3 ரன்னில் வெளியேறினார். 31 ஓவர் முடிவில் 157/2 என்ற நிலையில் விளையாடிவரும் இந்திய அணியில், சுப்மன் கில் 40 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 27 ரன்னிலும் பேட்டிங் செய்து வருகின்றனர்.
ரோகித் சர்மா அணிக்குள் வந்தபிறகு தொடக்க வீரராக கேஎல் ராகுல் தொடர மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பயிற்சி ஆட்டத்தில் கேஎல் ராகுல் ராகுல் தொடக்க வீரராகவும், ரோகித் சர்மா 4வது வீரராகவும் களமிறங்கி விளையாடியுள்ளனர். டிசம்பர் 6-ம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இதுவே தொடரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.