Rohit Sharma, Shardul Thakur x page
கிரிக்கெட்

“சதமடிச்சது ரோகித்துதான்; ஆனா..” - ‘படையப்பா’ வசனத்துடன் கெத்து காட்டிய ஷர்துல் தாக்கூர்!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்து திரும்பிப் பார்க்கவைத்த ரோகித் சர்மாவின் பேட் குறித்து சக வீரர் ஷர்துல் தாக்கூர் பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் முன்னாள் கேப்டன்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இடம்பெற்றிருந்தனர். இத்தொடரில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தொடரை இழந்தது. எனினும், அனுபவசாலிகளும் நட்சத்திர வீரர்களுமான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இளம் வீரர்களைவிட சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர்.

தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி சொதப்பியபோதும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அரைசதங்கள் அடித்து தமது திறமையை நிரூபித்தார். அதேபோல், முதல் இரண்டு போட்டிகளில் ஹிட்மேன் ரோகித் சர்மா சொதப்பிய நிலையில், அவர் ஓய்வுபெற இருப்பதாகவும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3ஆவது போட்டியே அவர் விளையாடும் கடைசிப் போட்டி எனத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தது.

இந்தச் சூழலில்தான் ரோகித் சர்மா, அந்த 3ஆவது போட்டியில் சதமடித்து அனைவரையும் வியக்கவைத்தார். தவிர, விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அவர், அந்தப் போட்டியில், 110 பந்துகளில் 17 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 138 ரன்கள் குவித்தார். மேலும், தன்னுடைய 34ஆவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்த அவர், இங்கிலாந்து மண்ணில் 8ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். மேலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா வரலாறு படைத்தார்.

இந்த நிலையில், ரோகித் சதமடித்தது குறித்துப் பேசிய ஷர்துல் தாக்கூர், ”எஸ்.எஸ் கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனம் எனக்கு சில அருமையான பேட்களை வழங்கியிருந்தது. அதன் தரத்தைப் பார்த்துப் பாராட்டிய ரோகித், தனக்கு இரண்டு பேட்களைத் தரும்படி கேட்டார். இந்திய கிரிக்கெட்டுக்கு எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்களைத் தந்த ஹிட்மேனுக்கு என்னால் எப்படி பேட் இல்லை என்று சொல்ல முடியும்? எனது பேட்டைப் பயன்படுத்தி அவர் லார்ட்ஸில் வரலாற்றுச் சதம் அடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, போட்டியின்போது இந்தி வர்ணனைக் குழுவில் இருந்த ஷர்துல் தாக்கூர், "நாளைக்கு இதுதான் தலைப்புச் செய்தி" என்று ஜாலியாகக் கூறி காலரைத் தூக்கி விட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.