ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. பரபரப்பாக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவி 2-1 என ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டியில் தொடரை 2-2 என சமன் செய்யும் முயற்சியிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்கும் முயற்சியிலும் இந்தியா இறங்கியுள்ளது.
சிட்னியில் நடைபெற்றுவரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆல்அவுட் செய்திருக்கும் இந்தியா, போட்டியை வெல்வதற்காக போராடி வருகிறது.
5வது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா விலகிய நிலையில், இந்திய அணியின் கேப்டனாக பும்ரா வழிநடத்தினார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் தேர்வுசெய்ய இந்தியா பேட்டிங் செய்தது.
நல்ல தொடக்கம் கிடைத்தபோதும் போலண்ட்டின் அசத்தலான பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்காமல் இந்திய அணி 185 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்களும், ஜடேஜா 26 மற்றும் பும்ரா 22 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பும்ரா முதல் நாள் முடிவில் கவாஜாவை வெளியேற்றி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய பவுலர்கள் 181 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டினர். இந்திய அணியில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்னா தலா 3 விக்கெட்டுகள், பும்ரா மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகள் என அனைவரும் பங்களிப்பளித்தனர்.
கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட், நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் சோபிக்காத நிலையில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்த சூழலில் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் அடித்து சிறப்பான பங்களிப்பு கொடுத்த பண்ட், இன்றைய இரண்டாவது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என விளாசி 184 ஸ்டிரைக்ரேட்டில் 33 பந்துகளில் 61 ரன்கள் அடித்து தன்மீதான விமர்சனத்திற்கெல்லாம் பதிலடி கொடுத்தார். 29 பந்துகளில் அரைசதமடித்த ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா மண்ணில் அதிவேகமாக அரைசதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார் என்று நினைத்தபோது 61 ரன்னில் பண்ட் வெளியேற, இந்திய அணி 141 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது. இந்திய அணி குறைந்தபட்சம் வெற்றிக்காக போராட வேண்டுமென்றால் இதற்குபிறகு இந்தியா அதிகபட்சம் 250 ரன்களை கடக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் 200 ரன்களை அடிக்க வேண்டும். இன்றைய நாள் முடிவில் ஜடேஜா மற்றும் சுந்தர் இருவரும் களத்தில் நீடிக்கின்றனர்.
இந்த ஜோடி நாளை நின்று ஒரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாவது போடவேண்டும், இந்தியா இந்தபோட்டியில் வென்று தொடரை 2-2 என சமன்செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.