rinku singh
rinku singh BCCI
கிரிக்கெட்

டெத் ஓவரில் எப்படி ஆட வேண்டும்? தோனி சொன்ன கூல் மந்திரம்!- ரின்கு சிங் பகிர்ந்த சுவாரசியம்

Rishan Vengai

இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியை சந்தித்த பிறகு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. நேற்று தொடங்கிய முதல் டி20 போட்டியில் 209 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி, பரபரப்பான கடைசி ஓவரில் ரின்கு சிங் ஆடிய ஒரு சிறப்பான இன்னிங்ஸ் மூலம் வெற்றிப்பெற்றது.

Rinku Singh

டெத் ஓவர்கள் எனக் கூறப்படும் கடைசி 2-3 ஓவர்களில் பேட்டிங் செய்த மற்ற இந்திய வீரர்கள் பதற்றத்துடன் ஆடி அவுட்டான போது, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரின்கு சிங் ஒரு அனுபவம் வாய்ந்த வீரரைபோல் நிலைத்து நின்று போட்டியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அவருடைய அந்த ஆட்டமுறைதான் இந்திய அணிக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில், இந்திய ரசிகர்கள் ரின்கு சிங் பேட்டிங்கை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இறுதி ஓவர்களில் பேட்டிங் செய்யும் யுக்தி குறித்து பேசியுள்ளார் ரின்கு சிங்.

இந்த இரண்டு விசயத்தை கடைபிடியுங்கள்! தோனி சொன்ன மந்திர சொற்கள்!

பிசிசிஐ பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் ரின்கு சிங், “ உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு எங்கள் அணி போட்டியில் வெற்றி பெற்றிருப்பது நல்ல விஷயம். நான் பேட்டிங் செய்ய சென்றபோது அது எனக்கு சரியான சூழ்நிலையாக இருந்தது. சூர்யா பாயுடன் ஒரு நல்ல ஆட்டத்தை கொண்டிருந்ததாக உணர்ந்தேன். ஆனால் கடைசிநேரத்தில் போட்டி என் கையில் இருந்தபோது, இதற்கு முன் இதேபோன்ற ஸ்கோரைத் துரத்துவதில் நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றி யோசித்தேன். என்னால் முடிந்தவரை அமைதியாக இருந்து ஆட்டத்தை இறுதி ஓவருக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என முடிவு செய்து அதற்கேற்றார்போல் செயல்பட்டேன் ”என்று ரின்கு சிங் பிசிசிஐ உடன் பேசியுள்ளார்.

rinku singh

மேலும் கடைசி நேரத்தில் எப்படி அமைதி மற்றும் கவனத்தோடு செயல்பட முடிந்தது என்று பேசியிருக்கும் ரின்கு சிங், தோனியுடன் பேசிய உரையாடல் குறித்து பகிர்ந்துள்ளார். அதுகுறித்து பேசுகையில், “மஹி பாயுடன் பேசும்போது அழுத்தம் நிறைந்த கடைசி 2-3 ஓவர்களில் எப்படி பேட்டிங் செய்யவேண்டும் என்பது பற்றி கேட்டேன். அப்போது அவர், “அமைதியாக இருந்து பந்தை நேராக அடிக்கப் பார்க்க வேண்டும். அது தான் மிக முக்கியம்” என்று என்னிடம் கூறினார். அதைத்தான் நான் பின்பற்றிவருகிறேன். டெத் ஓவர்களில் அமைதியாக இருக்க முயற்சி செய்கிறேன், அதே நேரம் அதிகமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் என் ஷாட்களை அடிக்க முயல்கிறேன்” என்று ரின்கு சிங் மேலும் கூறியுள்ளார்.