vinod kambli web
கிரிக்கெட்

வினோத் காம்ப்ளிக்கு மூளையில் ரத்தக் கட்டி.. மோசமடைந்த உடல்நிலை! இலவசமாக வாழ்நாள் சிகிச்சை!

வினோத் காம்ப்ளிக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதாக சிகிச்சையளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Rishan Vengai

1988-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டானது இரண்டு திறமையான சிறுவர்களை அடையாளம் கண்டது. ஹாரிஸ் ஷீல்ட் அரையிறுதிப்போட்டியில் 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட 15 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள், தனித்தனியாக 326 நாட் அவுட், 349 நாட் அவுட் என ஆட்டமிழக்காமல் உலக கிரிக்கெட்டின் ஐகானாக மாறும் திறமையை தங்களுக்குள் கொண்டிருந்தனர்.

அதில் 15 வயது சிறுவனாக இருந்த சச்சின் டெண்டுல்கர் 1989-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமாகி கிரிக்கெட்டின் கடவுள் என்ற அந்தஸ்தை பெற்றார். அதேபோல 16 வயது சிறுவனாக இருந்த வினோத் காம்ப்ளி 1991-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமாக தன்னுடைய 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டி என இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து 2 இரட்டை சதங்களை பதிவுசெய்து எந்த உலகவீரரும் படைக்காத சாதனையை படைத்தார்.

வினோத் காம்ப்ளி

அபரிவிதமான திறமையுடன் உலாவந்த வினோத் காம்ப்ளி குடிப்பழக்கம், ஒழுக்கமின்மை என்ற மோசமான பிரச்னைக்குள் சிக்கி சிறிது காலத்திலேயே காணாமல் போனார். 1991-ல் அறிமுகமான அவர் 2000-ல் தன்னுடைய கடைசி சர்வதேச போட்டியை விளையாடினார்.

போதை, குடிப்பழக்கம் போன்றவற்றால் நிறைய உடல்நல பிரச்னைகளை எதிர்கொண்ட அவரை, தன்னுடைய பால்ய கிரிக்கெட் நண்பனான சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் போன்றவர்கள் தொழில் ரீதியாகவும், பண ரீதியாகவும் நிறைய உதவிகளை செய்தபோதிலும் ஒழுக்கமின்மையால் தற்போது நீண்ட நோய்வாய்ப்பட்டுள்ளார் வினோத் காம்ப்ளி.

வினோத் காம்ப்ளி

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிற்கவே முடியாத நிலையில் சச்சினை பார்த்து காம்ப்ளி கண்கலங்கிய வீடியோ வைரலான நிலையில், தற்போது தீவிர உடல்நல பிரச்னையால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் காம்ப்ளி.

மூளையில் கட்டி.. வாழ்நாள் சிகிச்சை அளிக்க முன்வந்த மருத்துவமனை!

வினோத் காம்ப்ளிக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்ததாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று செய்திகள் வெளிவந்தன. முதலில் அவருக்கு சிறுநீர் தொற்று மற்றும் வயிற்று வலி இருப்பதாகவே சொல்லப்பட்டது.

ஆனால் சமீபத்திய தகவலின் படி பரிசோதனை செய்து பார்த்தபோது வினோத் காம்ப்ளி மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் தானேவில் உள்ள அக்ரிதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வினோத் காம்ப்ளி

தகவல்களின் படி வினோத் காம்ப்ளி உடல்நலம் குறித்து தெரிவித்திருக்கும் டாக்டர் விவேக் திரிவேதி, மருத்துவப் பரிசோதனையில் வினோத் காம்ப்ளிக்கு மூளையில் ரத்தக் கட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கூடுதல் பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் கிரிக்கெட் பென்சன் பணத்தை மட்டுமே வைத்து வாழ்வாதாரத்தை பார்த்துவரும் வினோத் காம்ப்ளிக்கு, வாழ்நாள் முழுவதும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று தானேயில் உள்ள அக்ரிதி மருத்துவமனையின் பொறுப்பாளர் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.